இயற்கை அனர்த்தத்தின் போதுஅத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்வகிக்க ஒரு முறையான அமைப்பை ஏற்படுத்தத் தவறியதன் காரணமாகவே காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
‘தி டெய்லி மோர்னிங்’ பத்திரிகைக்குப் பேட்டியளித்த தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் சில வர்த்தகர்கள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி உடனடியாக இலாபம் ஈட்டுவதாகவும் கூறினார். முறையான ஒழுங்குமுறை அல்லது விலை நிலைப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லாததால் இது நடக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

“ஒரு நெருக்கடி காலத்தில் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் வர்த்தகம் வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை இத்தகைய சூழ்நிலைக்குத் தயாராவதில் தோல்வியடைந்துள்ளன.
ஒரு திட்டமோ வழிகாட்டுதலோ என்ன வரப்போகிறது என்ற புரிதலோ இல்லை. அதனால்தான் இது நடந்தது. இந்த நிலையி அதிக விலைக்கு விற்கப்படும் எதையும் வாங்க வேண்டாம் என்று மக்களைக் கேட்பது மட்டுமே எங்களால் செய்யக்கூடியது” என்று அவர் கூறினார்.
பல முக்கிய விவசாயப் பகுதிகளில் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பயிர்ச்செய்கைகள் சேதமடைந்துள்ளதால் பற்றாக்குறை எதிர்பார்க்கப்படும் ஒரு நேரத்தில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. மேலும் பாதிப்புகள் வரலாம் என்று பயந்து கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் பலர் அதிக அளவில் பொருட்களை வாங்கியதால் ஏற்பட்ட பதட்டமான கொள்முதல் காரணமாக விநியோக நிலைமை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என்று வர்த்தகம் வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.