இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு குறித்து சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவிற்கு இரங்கல் செய்தியை அனுப்பினார்.
அச்செய்தியில் நாட்டில் அடுத்தடுத்து பெய்த கனமழை மற்றும் தீவிர வானிலை நிலைமைகளால் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து தான் அதிர்ச்சியடைந்ததாக சி ஜின்பிங் கூறினார்.
சீன அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் துயரமடைந்த குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனமார்ந்த அனுதாபங்களையும் சி ஜின்பிங் தெரிவித்தார்.
சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உண்மையான பரஸ்பர உதவியை வழங்கும் மூலோபாய கூட்டுறவுப் பங்காளிகள் என்றும் தலைமுறை தலைமுறையாக நட்புறவைப் பேணி வருகின்றன என்றும் சி ஜின்பிங் கூறினார். பேரிடரைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் வலுவான தலைமையின் கீழ் இலங்கை மக்கள் இந்த அனர்த்தத்தை முறியடித்து தங்கள் தாயகத்தை விரைவில் மீளக் கட்டியெழுப்புவார்கள் என்று தான் நம்புவதாகவும் சி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்தார்.
