டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னர், இலங்கையின் தேசிய மீட்புத் திட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களையும் உட்கட்டமைப்புகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கான தனது அர்ப்பணிப்பை சீனா இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming), ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த போது இந்த உறுதியை வழங்கினார். சிரேஷ்ட சீனப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வாங் டோங்மிங், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காகத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை இந்த இக்கட்டான நிலையிலிருந்து விரைவாக மீண்டெழும் என்பதில் சீனா நம்பிக்கையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடுமையான இந்த இயற்கை அனர்த்தத்தினால் இலங்கை மக்கள் அடைந்துள்ள துயரத்தை சீன அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி திஸாநாயக்க, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சீனா வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், சேதமடைந்துள்ள ரயில்வே வலையமைப்பைச் சீரமைக்க சீனாவின் தொழில்நுட்ப உதவியைக் கோரிய அவர், தேசிய ஸ்திரத்தன்மைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.