கடுவெலப்பகுதிக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது பூர்ணிமாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் வீட்டை விட்டு வெளியேற அதிக நேரம் இருக்கவில்லை.
“எங்கள் வீடு ஆற்றோரமாகவே இருந்தது என்று அவர் நினைவு கூர்கிறார். “வெள்ளம் உயர்ந்தபோது அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.” தற்போது தனது தாய் மற்றும் சிறு குழந்தைகளுடன் ஒரு தற்காலிக தங்குமிடத்தில் வசித்து வரும் அவர் மிக அடிப்படையான தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய அன்றாடம் படும் போராட்டத்தை விவரிக்கிறார்.
“எனது குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்கள் இல்லை உடைகள் இல்லை. எனது கடைசி குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கூட தொலைந்துவிட்டது. இங்கே 32 குடும்பங்கள் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரே இரவில் அனைத்தையும் இழந்துவிட்டோம்.”

இலங்கை முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மற்றவர்களைப் போலவே பூர்ணிமாவின் குடும்பமும் நவம்பர் 28 அன்று கரையை கடந்த ‘டிட்வா’ சூறாவளியின் பேரழிவிற்குப் பிறகு கற்பனை செய்ய முடியாத இழப்புகளைச் சுமந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகின்றனர்.