இலங்கையில் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீட்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கி வரும் ஆதரவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
-
ஸ்டார்லிங்க் (Starlink): பேரிடர் கால தகவல் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், 145 ஸ்டார்லிங்க் கருவிகளை இந்நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், இலங்கையில் உள்ள புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 2025 டிசம்பர் இறுதி வரை இலவச சேவையை வழங்குகிறது.
-
மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் MIT: சூறாவளியால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்த துல்லியமான தரவுகளைச் சேகரிக்கும் திட்டத்தை மைக்ரோசாப்ட் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இந்த முயற்சிகள் “அமெரிக்கக் கண்டுபிடிப்புகளின் சிறப்பையும், எமது கூட்டு முயற்சி மற்றும் பரோபகாரப் பண்பையும் பிரதிபலிக்கின்றன” என்று தூதுவர் சங் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு அமெரிக்க நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
