தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த மீட்புப் பணிகள், நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவிகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) அவர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, சமீபத்திய அனர்த்தத்தின் போது இலங்கையர்கள் வெளிப்படுத்திய பலமான தேசிய ஒற்றுமை மற்றும் மீண்டெழும் திறனை ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டினார். கடந்த காலக் குறைபாடுகளிலிருந்து தற்போதைய மீட்பு நடவடிக்கைகள் தீர்க்கமான மாற்றத்தைப் பிரதிபலிப்பதாகவும், இது மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறையை நோக்கிய ஒரு திருப்புமுனை என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாக அங்கீகரித்தல் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து பிரதி அமைச்சர் விளக்கினார்.
வெளிநாட்டு நிவாரண உதவிகளைக் கண்காணிப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், அரசாங்க முகவர் நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்பிற்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) பங்கு குறித்தும் அவர் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமளித்தார்.
தளவாடச் சவால்கள் (Logistical challenges), இடமாற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட களஞ்சிய வசதிகள் ஆகியவை குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை (DMC) சரக்குகளைப் பெறுபவராக (Consignee) நியமிப்பதன் மூலம் நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், மத்திய தளவாட ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்குமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச பங்காளிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்கு பிரதி அமைச்சர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான உதவிகளை மீண்டும் உறுதிப்படுத்திய வதிவிட ஒருங்கிணைப்பாளர், பயனுள்ள தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்துடன் கூடிய ஒருமைப்படுத்தப்பட்ட கட்டளைக் கட்டமைப்புகள் (Unified command structures) குறித்த சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், மனிதாபிமான உதவிகளை விரைவாக விடுவிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தற்காலிக ‘ஒரே கூரையின் கீழ் சேவை’ (One-stop facility) வசதியை ஏற்படுத்துமாறும் அவர் முன்மொழிந்தார்.
