நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்மொழியப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைமதிப்பீட்டு அரசாங்க நிதி ஒதுக்கீடானது 2026 ஏப்ரல் மாதத்திற்குள் நாடுவங்குரோத்து நிலையை அடைவதற்கு வழிவகுக்கும் என்ற கூற்றுக்களை நிராகரித்தார்.
அரசாங்கம் வலுவான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான நிதி இலக்குகளையும் பேணி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“நீண்ட காலமாக திறைசேரி கணக்கு மேலதிக பற்று நிலையிலேயே இருந்தது. 2018 இல் இது 180 பில்லியன் ரூபாயாகவும் 2019 இல் 244 பில்லியன் ரூபாயாகவும் 2020 இல் 575 பில்லியன் ரூபாயாகவும் இருந்ததுடன் 2021 இல் அது 821 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது” என ஜனாதிபதி தெரிவித்தார்.
“இதற்கு மாறாக எமது அரசாங்கத்தின் கீழ் 2025 நவம்பர் அளவில் திறைசேரி கணக்கு 1202 பில்லியன் ரூபாய் நேர்மறையான மிகுதியைக்) காட்டியது — இது 2 டிரில்லியன் ரூபாய் முன்னேற்றமாகும்” என்று அவர் கூறினார்.
இந்த நிதி நிலவரமானது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலதிக மதிப்பீட்டைச் சமர்ப்பிக்க அரசாங்கத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக 500 பில்லியன் ரூபாய் மேலதிக மதிப்பீட்டிற்கு பொது நிதி பற்றிய குழு நேற்று அனுமதி வழங்கியது.