கொழும்பு துறைமுகத்தில் தற்போது நிலவும் கடுமையான நெரிசல் காரணமாக, ‘டிட்வா’ (Ditwah) புயலுக்குப் பிந்தைய அவசர நிவாரணப் பணிகள் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. தற்போது துறைமுகத்தில் 3,000 முதல் 4,000 கொள்கலன்கள் (Containers) தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றில் சுமார் 400 மனிதாபிமான உதவிப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க முகவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தின் (CHA) தகவல்படி, சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து வந்த அவசர உதவிகள் கடந்த ஐந்து நாட்களாக தாமதமாகியுள்ளன. இருப்பினும், நூற்றுக்கணக்கான நிவாரணப் பொருட்கள் முடங்கிக் கிடப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் மறுத்துள்ளது.
இது குறித்து சுங்க முகவர்கள் சங்கத்தின் தலைவர் முஹம்மது நியாஸ் ‘ கருத்து தெரிவிக்கையில்:
“நெரிசல் காரணமாக சர்வதேச நிவாரண நடவடிக்கைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, நெரிசல் காலங்களில் கொள்கலன்களை விரைவாக விடுவிக்கும் ஒரு நடைமுறை இருந்தது. ஆனால், 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் ஸ்கேனிங் உபகரணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அந்த நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.”
“வணிக ரீதியான பொருட்கள் மட்டுமன்றி, நாட்டிற்குள் வரும் மனிதாபிமான உதவிப் பொருட்களும் முடங்கியுள்ளன. உதவிப் பொருட்கள் சரியான நேரத்தில் மக்களைச் சென்றடையாதபோது, அது நன்கொடை வழங்கும் நாடுகளின் முயற்சிகளை வீணடிக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
தற்போது, நிவாரணக் கொள்கலன்களும் சாதாரண வணிகக் கொள்கலன்களைப் போலவே வரிசையிலும், நீண்ட பரிசோதனை முறைகளிலும் வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொடவிடம் கேட்டபோது, 400 நிவாரணக் கொள்கலன்கள் தாமதமாகியுள்ளன என்பதை அவர் நிராகரித்தார். உணவுப் பொருட்கள் போன்ற வெள்ள நிவாரணப் பொருட்கள் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அவை அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக வலியுறுத்தினார்.
“வெள்ள நிவாரணப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவை வரிசையில் வைக்கப்படுவதில்லை. ஏதேனும் தாமதம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டால், நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்,” என்று அருக்கொட கூறினார்.
தற்போது ஒரு நிவாரணக் கொள்கலன் கூட துறைமுகத்தில் தேங்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், “சுமார் 60 நிவாரணக் கொள்கலன்கள் வந்துள்ளன. அவற்றை கையாள்வதற்கு ஒரு சிறப்புப் பணிக்குழுவை நான் கண்காணித்து வருகிறேன். அவை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாகப் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன,” என்றார்.
பரிசோதனையின் போது சில மணிநேரங்கள் தாமதம் ஏற்படலாமே தவிர, வேண்டுமென்றே தாமதங்கள் செய்யப்படுவதில்லை என்றும், துறைமுக நெரிசல் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், இறக்குமதியாளர்களால் சுங்கப் பிரகடனம் (CusDec) சமர்ப்பிக்கப்பட்ட கொள்கலன்கள் பற்றி மட்டுமே சுங்கத் திணைக்களத்திற்குத் தெரியும் என்றும், முனையங்களில் (Terminals) இன்னும் தேங்கிக் கிடக்கும் நிவாரணக் கொள்கலன்கள் பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றும் முஹம்மது நியாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
