ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (அமெரிக்காவிற்கே முன்னுரிமை) கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பவர்களைக் கொண்டு, வெளிநாடுகளுக்கான அமெரிக்க இராஜதந்திர நிலையை மாற்றியமைக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் உட்பட சுமார் 30 சிரேஷ்ட இராஜதந்திரிகளைத் திரும்ப அழைக்க அந்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இலங்கை உட்பட குறைந்தபட்சம் 29 நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு, அவர்களின் பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் முடிவடையும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டுப் பணியாளர் மாற்றங்கள் குறித்து பெயர் வெளியிட விரும்பாத இரண்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பைடன் நிர்வாகத்தின் கீழ் பதவியேற்றவர்கள். ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்ப மாதங்களில் முக்கியமாக அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட நீக்கங்களில் இவர்கள் தப்பிப்பிழைத்திருந்தனர். இருப்பினும், கடந்த புதன்கிழமை வொஷிங்டனில் உள்ள அதிகாரிகளிடமிருந்து அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன.
தூதுவர்கள் ஜனாதிபதியின் விருப்பத்திற்கேற்ப பணியாற்றுகிறார்கள் என்றாலும், அவர்கள் பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள். இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் வெளிநாட்டு சேவைப் பணிகளை இழக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் விரும்பினால் வொஷிங்டனுக்குத் திரும்பி மற்ற பணிகளைப் பொறுப்பேற்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தூதுவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க வெளியுறவுத்துறை மறுத்துவிட்டது. ஆனால் இந்த மாற்றங்களை “எந்தவொரு நிர்வாகத்திலும் நடக்கும் ஒரு சாதாரண செயல்முறை” என்று தற்காத்துப் பேசியுள்ளது. ஒரு தூதுவர் என்பவர் “ஜனாதிபதியின் தனிப்பட்ட பிரதிநிதி” என்றும், அமெரிக்காவிற்கே முன்னுரிமை என்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் நபர்களை அந்தந்த நாடுகளில் நியமிப்பதை உறுதி செய்வது ஜனாதிபதியின் உரிமை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த நீக்கங்களால் ஆப்பிரிக்க கண்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. புருண்டி, கேமரூன், கேப் வெர்டே, காபோன், ஐவரி கோஸ்ட், மடகாஸ்கர், மொரிஷியஸ், நைஜர், நைஜீரியா, ருவாண்டா, செனகல், சோமாலியா மற்றும் உகாண்டா ஆகிய 13 நாடுகளின் தூதுவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக ஆசியா உள்ளது. பிஜி, லாவோஸ், மார்ஷல் தீவுகள், பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளில் தூதுவர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
ஐரோப்பாவில் நான்கு நாடுகளும் (ஆர்மீனியா, மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் ஸ்லோவாக்கியா), மத்திய கிழக்கில் தலா இரண்டு நாடுகளும் (அல்ஜீரியா மற்றும் எகிப்து), தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் (நேபாளம் மற்றும் இலங்கை), இரண்டு நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன
AFP