டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணம் வழங்குமாறு சர்வதேச பொருளாதார நிபுணர்கள் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முழுமையாக ஆதரித்துள்ளார்.
“ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது அரசாங்கம் இந்த நோக்கங்களை அடைவதற்கான தைரியம், ஞானம் மற்றும் திறனைக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரேமதாச ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், சமத்துவமின்மை தொடர்பான நிபுணர் தோமஸ் பிகெட்டி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளர் ஜெயதி கோஷ் உள்ளிட்ட 120 முன்னணி உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் குழு, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்க வருமானத்தில் 25 சதவீதத்தை ஏற்கனவே கடன் திருப்பிச் செலுத்துவதற்காகச் செலவிடும் நிலையில், 600-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்து, இலட்சக்கணக்கான வீடுகளை அழித்த சூறாவளியின் அழிவுகளை எதிர்கொள்ளும் அதேவேளையில், தனது கடப்பாடுகளைத் தொடர முடியாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நிதி வசதிகளை இந்த சுற்றுச்சூழல் அவசரநிலை அழித்துவிட்டதாக எச்சரித்துள்ள பொருளாதார நிபுணர்கள், நிலைத்தன்மையை மீட்டெடுக்க புதிய பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
“சமீபத்திய சூறாவளி, பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கை இப்போது கடுமையான பொருளாதார அதிர்ச்சியை எதிர்கொள்கிறது. இது உள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்ட அவர்கள், இலங்கையின் வெளிநாட்டு இறையாண்மை கடன் கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
