இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இன்று (டிசம்பர் 23) கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் விசேட தூதுவராக அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னர் நாடு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தும் நோக்கில் அமைந்த அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக பிரதமர் ஹரினி அமரசூரியவுடனான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் புகையிரதப் பாதைகள், பாலங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் விவசாயத் துறையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதை அமைச்சர் ஜெய்சங்கர் மீள உறுதிப்படுத்தினார். அத்துடன், வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளுக்குப் பதிலளிப்பதற்கான பயனுள்ள அமைப்புகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, இரு தரப்பினரும் தற்போதைய நிவாரண முயற்சிகளை மீளாய்வு செய்ததுடன், பேரிடர் கால பதில் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.
‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளில், உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு மீள்குடியேற்றம், இருப்பிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் போன்ற நீண்டகால நடவடிக்கைகள் உள்ளடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, இந்திய அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இயல்பு நிலையைத் திரும்புவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் அமரசூரிய மேலும் தெரிவித்தார். அவசர காலத்தின் போது வெளிப்படுத்தப்பட்டவெளிப்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமை, தன்னார்வத் தொண்டு மற்றும் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பாதிப்புகளைக் குறைத்து பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்