இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபையின் (PIBA) அதிகாரிகளுடன் இணைந்து தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் முற்போக்கு மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நேற்று (22) நடத்தினார்.
இஸ்ரேலில் இலங்கைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் முற்போக்கு மீளாய்வு இதுவாகும். வீட்டு பராமரிப்பு சேவைகள், விவசாயம், கட்டுமானம், ஹோட்டல்கள் மற்றும் வீடமைப்பு பராமரிப்பு, உற்பத்தி மற்றும் உணவகம் சார்ந்த வேலைவாய்ப்பு ஆகிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஆறு வேலைவாய்ப்புத் துறைகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் இதன்போது மீளாய்வு செய்ததுடன், நிலவும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, வரும் ஆண்டுகளில் இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
