நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்து, நாட்டையே சீரழித்த அந்தப் பாரிய பேரழிவான ‘டிட்வா’ (Ditva) சூறாவளி கடந்த 27 ஆம் திகதி மாலை இடம்பெற்றது. மலைநாட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்குகளினால் மக்கள் எதிர்கொண்ட துயரச் சம்பவங்கள் இப்போதும்முடிவற்ற மனவேதனைய ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன
இந்தப் பேரழிவில் வெள்ளப்பெருக்கிலும் சேற்றுக்குள்ளும் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர்.
தனது கையை விட்டு நழுவி அந்தப் பாரிய மண்சரிவில்சிக்கிய தனது அன்புக்குரிய மகள், தனது வீட்டுத் தோட்டத்திலேயே எங்காவது ஒரு மண் மேட்டின் கீழ் சிக்கியிருப்பார் என்று நம்பி, அவரைத் தேடித் தருமாறு அழுது புலம்பும் ஒரு தாயான கே. எம். பண்டாரமெணிக்காவை (50) நாம் பதுளை, வியலுவ, கந்தகெட்டிய, பல்லேகந்த கிராமத்தில் சந்தித்தோம்.
அவரும் அவரது மூத்த மகனும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 25 மீற்றர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், அந்த மகனின் உதவியுடன் அவர் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தில் பதுளை, கந்தகெட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாகொல்ல கிராமத்தைச் சேர்ந்த எம். ஜி. காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ என்ற 21 வயதுடைய யுவதி காணாமல் போயுள்ளார். அதேவேளை, அவரது தாத்தா எம். ஜி. நேத்ரிஸ் (83) மற்றும் பாட்டி டி. ஏ. பியசீலி திஸாநாயக்க (72) ஆகியோர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அக்கிராமத்தில் வசித்த ஆர். டி. ஜேன் (74) மற்றும் ஆர். டி. தனேரிஸ் (65) ஆகியோரும்மண்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். தனது பெற்றோரை இழந்ததுடன், மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாத நிலையில் தான் தற்போது துயரம் தாங்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்தத் தாய் கூறுகிறார்.

காணாமல் போயுள்ள எம். ஜி. காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ
எதிர்பாராத தருணத்தில் கிராமத்தின் மேல் பகுதியிலிருந்து வந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி, தனது கண்முன்னே தனது தாய் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு அவர் திகைத்துப் போனார். வீட்டில் மண்சரிவுக்குள் சிக்கியிருந்த தந்தை மீட்கப்பட்ட போதிலும், அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். ஒரே நேரத்தில் தாயையும் தந்தையையும் இழந்த அவர், தன்னுடனேயே கையைப் பிடித்துக் கொண்டு நின்ற தனது மகளும் வெள்ளத்தில் மறைந்தபோது நிலைகுலைந்து போனார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த அவரது தாயின் சடலம், விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தில் பதுலு ஓயவின் கிரிகோந்தැன்ன பகுதியில் மரக்கட்டைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டது. எனினும், சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவரது மகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
காணாமல் போயுள்ள எம். ஜி. காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ, கல்வி மற்றும் பொதுக் காரியங்களில் சிறந்து விளங்கிய ஒரு திறமையான மாணவி ஆவார். அவர் கல்வியியல் கல்லூரியில் இணைய எதிர்பார்த்திருந்தார்.
சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்தும் மகளின் சடலத்தைக் கூட காணக் கிடைக்காததால், அவரது தாய் நாளொன்றுக்கு முப்பது நாற்பது தடவைகள் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்குச் சென்று தேடுகிறார். அவர் தான் எதிர்கொண்ட அந்தப் பயங்கரமான சம்பவத்தை இவ்வாறு விவரித்தார்:
“எனது அம்மா, அப்பா, மகள், மகன் மற்றும் நான் ஆகிய ஐந்து பேரும் நண்பர்களைப் போலவே வாழ்ந்தோம். அம்மாவும் அப்பாவும் எங்கள் வீட்டிற்குச் சற்று தள்ளி ஒரு வீட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் ஐவரும் ஒன்றாகவே உணவருந்துவோம். எனது கணவர் எஸ்.டி.எஃப் (STF) பிரிவில் பணிபுரிகிறார், அவர் அன்று வீட்டில் இருக்கவில்லை.
கடந்த 24 ஆம் திகதி மழை ஆரம்பமானது. மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்தது. 27 ஆம் திகதி காலையிலிருந்தே ஒருவிதமான அச்சுறுத்தல் காணப்பட்டது. அன்று மாலை 3:30 மணியளவில் தான் இது நடந்தது. எல்லாம் நடக்க 10 அல்லது 15 நிமிடங்கள் கூட எடுக்கவில்லை. திடீரென பாரிய கற்கள் உருளும் சத்தம் கேட்டது. விமானம் செல்கிறதா என்று மேலே பார்த்தோம். அதேவேளை நிலம் அதிரத் தொடங்கியது. மகளும் தடுமாறத் தொடங்கினாள்.
‘அம்மா, ஏதோ நடக்கிறது,மண்சரிவு வருகிறது’ என்று கூறிவிட்டு ஓட முயன்றோம், ஆனால் எங்களால் ஓட முடியவில்லை. நிலம் அதிரும் வேகத்தில் நாங்கள் விழுந்து விழுந்து ஓடினோம். அதேவேளை மலையிலிருந்து வந்த வெள்ளப்பெருக்கு என் மேல் மோதியது. எனக்குச் சிந்திக்கக் கூட நேரமிருக்கவில்லை. மகளின் கை நழுவியது. நானும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டேன். அப்போது எனது மகன் ஓடிவந்து என்னைக் காப்பாற்றினான். ஐயோ, என் மகளைக் காப்பாற்ற முடியாமல் போனதே!”
“எனக்குத் தெரியும் அவள் அதிக தூரம் சென்றிருக்கமாட்டாள். இந்த வீடு இருந்த இடத்திற்கு அடியில் இரண்டு மூன்று அடி ஆழத்தில் அவள் இருப்பாள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வீட்டை விட்டு முதலில் வெளியே குதித்தவள் அவள்தான்.”
“அதன்பின்னர் தந்தை ஒரு அறையில் சிக்கியிருந்தபோது மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வழியில்லை. சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார். ‘எங்கள் குடும்பமே முடிந்துவிட்டது மகனே, தங்கையைத் தேடிக் கண்டுபிடி’ என்று கூறிவிட்டு அவர் கண்மூடினார்.”
தனது மூத்த மகன் நவீன் பிரபாத் ராஜபக்ஷ (25) மட்டும் இல்லையென்றால், பண்டாரமெணிக்காவுக்கும் மகளுக்கும் பெற்றோருக்கும் ஏற்பட்ட அதே கதிதான் ஏற்பட்டிருக்கும். வெள்ளத்தின் சத்தத்தைக் கேட்டு வயலிலிருந்து ஓடிவந்த நவீன், தனது தாய் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டதும் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் வெள்ளத்தில் குதித்தார். “எனக்குப் பால் புகட்டிய தாயை நான் சாக விடமாட்டேன்” என்று கூறிப் போராடி தனது தாயை அவர் கரை சேர்த்தார்.
கந்தகெட்டிய கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் இந்த நிலச்சரிவு அனுபவத்தை எதிர்கொண்டனர். பலரது வீடுகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு அழிந்துள்ளன. கிராமத்திற்கு வரும் வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இன்னும் கிடைக்கவில்லை. கிராமத்திற்கு மேலேயுள்ள மலை எப்போது சரிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்கின்றனர்.
