டிட்வா’ சூறாவளி நகரங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தது மட்டுமல்லாமல், இலங்கையின் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பில் உள்ள காலநிலை பாதிப்பு மற்றும் நிறுவன ரீதியான பலவீனங்களுக்கு இடையிலான தொடர்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) படி, 16 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதாரச் செயல்பாடுகள் (அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16%) அபாயத்திற்குள்ளாகின. இது அனர்த்தங்கள் நாட்டின் உற்பத்தித் திறனை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
சாதாரண சேத மதிப்பீடுகளைப் போலன்றி, ILO அமைப்பானது ‘தொலை உணர்தல்’ (remote sensing) மற்றும் இரவு நேர ஒளிச் செறிவை (night-time light intensity) அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரப் பாதிப்புகளை மதிப்பிட்டுள்ளது. இது உலக வங்கியின் 4.1 பில்லியன் டொலர் மதிப்பீட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உலக வங்கியின் மதிப்பீடு பெரும்பாலும் பௌதீகக் கட்டமைப்புச் சேதங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது; ஆனால் வேலைவாய்ப்பு இழப்பு, முறைசாரா துறை பாதிப்புகள் மற்றும் நீண்டகால மறுசீரமைப்புச் செலவுகளைக் கருத்தில் கொள்வதில்லை. இந்த முரண்பாடு, பல்வேறு முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறைமை இல்லாததையே காட்டுகிறது.
தொழிற்சந்தை பாதிப்புகள்
தொழிற் சந்தையில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறிப்பாக எச்சரிக்கையூட்டுபவை:
-
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 374,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாக ILO மதிப்பிட்டுள்ளது.
-
இவர்களுக்கு மாதத்திற்கு 48 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் மீன்பிடி சமூகத்தினர் முறையான சமூகப் பாதுகாப்பு வலைகள் இல்லாததாலும், மறுவாழ்வுப் பணிகள் தாமதமாவதாலும் நீண்டகால வேலை பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஏற்கனவே எச்சரித்தது போல, இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறைமைகள் அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் கொண்டவை அல்ல. குறிப்பாக முறைசாரா மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது.
பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள்
சர்வதேச நாணய நிதியம் (IMF) மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது போல, காலநிலை அனர்த்தங்கள் இப்போது இலங்கையின் நிதி உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி இலக்குகளைச் சிதைக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளன. அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண அதிகார சபைகளுக்கு இடையே நிலவும் பலவீனமான ஒருங்கிணைப்பு, பொருளாதார இழப்புகளை அதிகரிப்பதுடன் வருங்கால கடன் தேவைகளையும் உயர்த்துகிறது.
ILO பரிந்துரைத்த வேலைவாய்ப்பு சார்ந்த மீட்புத் திட்டங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான (MSME) ஆதரவு ஆகியவற்றைச் செயல்படுத்துவதே இப்போதுள்ள முக்கிய சவாலாகும். நிறுவன ரீதியான பொறுப்புக்கூறல், நிகழ்நேරத் தரவுப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கல் இல்லாவிடில், மீட்புப் பணிகள் சமமற்ற முறையிலேயே அமையும்.
சூறாவளி டிட்வாவின்என்பது வெறும் மீள்எழுச்சிக்கான (Resilience) சோதனை மட்டுமல்ல, அது நாட்டின் நிர்வாகத் திறனுக்கான (Governance) சோதனையுமாகும். இந்த ஒருங்கிணைப்புக் குறைபாடுகள் சரிசெய்யப்படாவிட்டால், எதிர்கால காலநிலை அதிர்ச்சிகள் இன்னும் பாரிய பொருளாதார மற்றும் சமூக விலையைக் கோரும்