அமெரிக்காவின் தாக்குதலிற்குள்ளான நைஜீரிய கிராமத்தில் அச்சமும் குழப்பமும் -ஐஎஸ் அமைப்போ அல்லது வேறு குழுக்களோ தங்கள் கிராமத்தில் இல்லை என மக்கள் தெரிவிப்பு

CNN

அமெரிக்காவால் ஏவப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தங்களது கிராமத்தைத் தாக்கி, அங்குள்ள ஒரே ஒரு மருத்துவ வசதிக்கு சில மீட்டர் தொலைவில் விழுந்த ஒரு நாளுக்குப் பிறகு, வடமேற்கு நைஜீரியாவின் ஜாபோ (Jabo) கிராம மக்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

சோகோடோ (Sokoto) மாநிலத்தின் தம்புவால் மாவட்டத்தில் உள்ள, அமைதியான மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் விவசாய சமூகமான ஜாபோவின் குடியிருப்பாளர் சுலைமான் ககாரா சிஎன்என்-னிடம் பேசுகையில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தனது தலைக்கு மேலே ஒரு ஏவுகணை பறந்து சென்றபோது பலத்த சத்தத்தையும் தீப்பிழம்புகளையும் கண்டதாகத் தெரிவித்தார்.

அதன்பின்னர் சிறிது நேரத்தில், அது தரையில் மோதி வெடித்தது, இதனால் கிராம மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். “நேற்றிரவு எங்களால் தூங்க முடியவில்லை,” என்று ககாரா கூறினார். “நாங்கள் இதற்கு முன்பு இப்படி எதையும் பார்த்ததில்லை.”

ககாரா அந்த நேரத்தில் அதை உணரவில்லை, ஆனால் அவர் பார்த்தது அமெரிக்காவின் தாக்குதலின் ஒரு பகுதியாகும். இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் பயங்கரவாதிகளுக்கான “கிறிஸ்மஸ் பரிசு” என்று குறிப்பிட்டார்.

ஜாபோவில் ஏவுகணை விழுந்த சிறிது நேரத்திலேயே, பிராந்தியத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா “வலிமையான மற்றும் கொடிய தாக்குதலை” நடத்தியதாக டிரம்ப் வியாழக்கிழமையன்று அறிவித்தார். அந்த தீவிரவாதிகள் “முதன்மையாக அப்பாவி கிறிஸ்தவர்களை பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக காணாத அளவில் குறிவைத்து கொடூரமாகக் கொல்கிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க ஆப்பிரிக்க கட்டளைகத்தின் (US Africa Command) கூற்றுப்படி, இந்த நடவடிக்கை பல ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்துள்ளது. ஆனால் டிரம்பின் விளக்கம் ககாரா மற்றும் அவரது சக கிராமவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சோகோடோவின் சில பகுதிகள் கொள்ளை, கடத்தல் மற்றும் ‘லகுராவா’ (Lakurawa) போன்ற ஆயுதமேந்திய குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொண்டாலும் (இக்குழுவை இஸ்லாமிய அரசுடன் தொடர்பு இருப்பதாகக் கருதி நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியுள்ளது), ஜாபோ கிராமம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பெயர் போனது அல்ல என்றும், அங்குள்ள உள்ளூர் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுடன் அமைதியாக வாழ்கிறார்கள் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

“ஜாபோவில், நாங்கள் கிறிஸ்தவர்களை எங்கள் சகோதரர்களாகப் பார்க்கிறோம். எங்களுக்குள் மத மோதல்கள் இல்லை, எனவே நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை,” என்று ககாரா கூறினார்.

மாநில நாடாளுமன்றத்தில் தம்புவால் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பஷார் இசா ஜாபோ, இந்த கிராமத்தை “அமைதியான சமூகம்” என்று விவரித்தார். “இந்த பகுதியில் ஐஎஸ்ஐஎஸ், லகுராவா அல்லது வேறு எந்த பயங்கரவாத குழுக்களும் செயல்பட்ட வரலாறே இல்லை” என்று அவர் சிஎன்என்-னிடம் தெரிவித்தார்.

ஏவுகணை ஜாபோவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து “சுமார் 500 மீட்டர்” தொலைவில் உள்ள ஒரு வயல்வெளியைத் தாக்கியதாகவும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இந்தச் சம்பவம் “மக்களிடையே பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

நைஜீரிய தகவல் அமைச்சகம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவுடன் இணைந்து சோகோடோவின் தங்காசா (Tangaza) மாவட்ட காடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் மறைவிடங்களை குறிவைத்து அரசு “துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்தியது” என்று தெரிவித்தது.

இருப்பினும், “இந்த நடவடிக்கையின் போது, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் குப்பைகள் (debris) ஜாபோவிலும், வட-மத்திய குவாரா (Kwara) மாநிலத்தின் மற்றொரு பகுதியிலும் விழுந்தன” என்று குறிப்பிட்டது. அதேநேரம் குடிமக்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பதையும் அது வலியுறுத்தியது.

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கடந்த மாதம் பென்டகனை இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகுமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். நைஜீரிய வெளியுறவு அமைச்சர் யூசுப் துக்கார் சிஎன்என்-னிடம் கூறுகையில், தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் தான் பேசியதாகவும், நைஜீரிய அதிபர் போலா டினுபு இதற்கு “அனுமதி” அளித்ததாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த நடவடிக்கை மத ரீதியான விவகாரம் அல்ல என்றும், பிராந்தியத்தில் உள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் துக்கார் கூறினார்.

நைஜீரியா பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் பாதுகாப்பு சவால்களுக்கு பின்னால் மதம் என்பது ஒரு காரணி மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமூக மற்றும் இன ரீதியான பகைகள், அத்துடன் நிலம் மற்றும் நீர் ஆதாரங்களுக்காக விவசாயிகள் மற்றும் மேய்ச்சல் சமூகத்தினருக்கு இடையே நிலவும் பதற்றங்களாலும் மோதல்கள் ஏற்படுகின்றன.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் (International Crisis Group) மூத்த ஆலோசகர் நாம்டி ஒபாசி கூறுகையில், அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் சில ஆயுதமேந்திய குழுக்களை பலவீனப்படுத்தலாம் என்றாலும், “நிர்வாகக் குறைபாடுகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பல்முனை வன்முறைகளை இந்தத் தாக்குதல்களால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியாது” என்று தெரிவித்தார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்