நம்பகமான கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டால் மாத்திரமே, அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக சர்வதேச நாடுகள் நிதி வழங்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
“நாட்டைப் பாதித்த பேரழிவினால் கண்டி மாவட்டமே அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த அனர்த்த நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாடாளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியேயும் ஐக்கிய மக்கள் சக்தியின் முழுமையான ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக உள்ளோம். அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்கள் காணப்படுகின்றன. இது அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டு அல்ல. இது குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தவே ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் 95 தற்காலிகத் தங்குமிடம் (முகாம்கள்) அமைக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் 2084 குடும்பங்கள் உள்ளன. மொத்தம் 6634 பேர் இந்த முகாம்களில் வசிக்கின்றனர். இவர்கள் மத வழிபாட்டுத் தலங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த மக்களை முகாம்களிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மக்களுக்குச் செல்வதற்கு இடமில்லை. அவர்களின் வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் வரை முறையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் வரை தற்காலிகக் கூடாரங்களையாவது வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறானதொரு பொறிமுறையைப் பின்பற்றுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறது.
கண்டி ஏரிவட்டம், உடவத்தை களேய, அனியவத்தை, பஹிரவகந்த மற்றும் ஹந்தானை தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் (NBRO) எந்த அறிக்கையும் இல்லை. ஆனால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அனைத்து அறிக்கைகளையும் அந்தந்த இடங்களுக்கு வழங்கியதாகக் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தன. எவ்வாறாயினும், கண்டியில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் குறித்து இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. அதேபோல் கண்டி தழுதா மாளிகைக்குப் பின்னால் உள்ள உடவத்தை களேய பகுதிக்கு அபாயம் இல்லை என அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலகம் கூறியுள்ளது. ஆனால் ஏனைய பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அனர்த்தத்தின் பின்னரே ஆய்வுகளை மேற்கொள்வதாகத் தெரியவருகிறது.
கண்டியின் அனைத்துப் பகுதிகளும் மண்சரிவுக்கு உள்ளாவதில்லை. எனினும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளர்களை அதிகரித்து, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளின் தகவல்களை விரைவாகப் பெறுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், அனர்த்தத்தினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாகச் சீரமைக்க கண்டி மாவட்டம் உள்ளிட்ட மலையகப் பகுதிகளுக்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகும்.”
