இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டு அதிகாரப்பூர்வக் குழு, இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பேரிடருக்குப் பிந்தைய மறுசீரமைப்புத் திட்டத்தை (Post-disaster reconstruction package) கையாளும் பொறுப்பை ஏற்கும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புத் திட்டங்கள், இந்தியக் கடன் திட்டத்தின் (Indian credit line) கீழ் மேற்கொள்ளப்படும் கொள்முதல் மற்றும் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக இந்தியாவில் இருந்து ஆட்களைப் பணியமர்த்துவது குறித்து இந்தக் கூட்டுக்குழு முடிவு செய்யும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டுக்குழுவானது, சாலை மற்றும் இரயில்வே; சுகாதாரம் மற்றும் கல்வி; வீட்டுவசதி; விவசாயம் மற்றும் உடனடி பேரிடர் கால மீட்புப் படையை உருவாக்குதல் ஆகிய ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது மாதங்கள் என மூன்று காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடிக்கப் பணியாற்றும்.
வீட்டுவசதி, மருத்துவம், கல்வி, இரயில்வே மற்றும் சாலை அமைத்தல் தொடர்பான மறுசீரமைப்புத் திட்டங்களுக்காகத் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட இந்தியக் குழுக்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டங்களை நடத்துவதற்கும் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் (Indian High Commission) அந்தந்த அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும். முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய மறுசீரமைப்புத் திட்டங்களின் பட்டியல் அடையாளம் காணப்படவுள்ள நிலையில், இதற்கான முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையைப் (NDRF) போன்றதொரு ‘உடனடி பேரிடர் கால மீட்புப் படையை’ (Immediate Disaster Response Team) இலங்கையில் நிறுவுவதற்கு இந்திய அரசு உதவும். இதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவும் வழங்கப்படும்.
இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தில், 350 மில்லியன் டொலர் சலுகைக் கடனாகவும் (concessional lines of credit), 100 மில்லியன் டாலர் மானியமாகவும் (grants) வழங்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஏனைய அரசாங்க மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தபோது இந்த நிவாரணத் திட்டத்தை அறிவித்தார்.
