ஒரு வருடத்தில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 ஆம் ஆண்டில் பதிவான 2,333,796 என்ற எண்ணிக்கையை இன்றைய தினம் விஞ்சியதை அடுத்தே இந்த சாதனை நிலைநாட்டப்பட்டது.
இந்த வரலாற்று மைல்கல்லை எட்டும் வகையில், 2025 ஆம் ஆண்டின் 2,333,797 ஆவது சுற்றுலாப் பயணியாக இந்தியப் பிரஜை ஒருவர் நாட்டிற்கு வருகை தந்ததுடன், அந்த குடும்பத்தினரை அன்புடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் செய்திருந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL 162 விமானம் மூலம் இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து வருகை தந்த பேராசிரியர் பெலிக்ஸ் பெஸ்லின் பெரேரா, திருமதி ரீனா பெர்னாண்டஸ் மற்றும் திருமதி ஆன் கிறிஸ்டினா பெரேரா ஆகியோரே இந்த அடையாளபூர்வ விருந்தினர்களாவர்.

நவம்பர் மாத இறுதியில் இருந்து நாட்டை பாதித்த ‘ சூறாவளியின் சவாலான சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்த சாதனை படைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். 2018 ஆம் ஆண்டில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 2,333,796 ஆக இருந்ததோடு, 2024 இல் அது 2,053,465 ஆகக் காணப்பட்டது.
இங்கு அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, அந்த எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.