சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ் மொன்டானா பனிச்சறுக்கு விடுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்திற்கு தாக்குதல் எதுவும் காரணமில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
வாலைஸ் மாகாணத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் பீட்ரைஸ் பில்லூட், “இந்தத் துயரமான சூழல் ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிய” விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய நிலையில் இது ஒரு தீ விபத்தாக இருக்கலாம் என்றே நாங்கள் கருதுகிறோம்; எந்தக் கட்டத்திலும் இது ஒரு தாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அவர் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தற்சமயம் இதற்கு மேல் விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களின் உடல்களைக் குடும்பத்தினரிடம் விரைவில் ஒப்படைக்கவும் பணிகள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“இப்பணியைச் செய்து முடிக்க இன்னும் கணிசமான வேலைகள் உள்ளன. அந்த முக்கியமான பணிகளுக்காக, அந்த மாவட்டம் தற்காலிகமாக மூடப்பட வேண்டியிருக்கும்” என அவர் தெரிவித்தார்