இலங்கை மின்சார சபையினால் (CEB) இந்த ஆண்டின் (2026) முதல் காலாண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள 11.57 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது புதிய ஆண்டின் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும் என்றும், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக அரசாங்கம் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிக்கு முரணானது என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, மின்சார சபை தனது கட்டண திருத்த முன்மொழிவை ஏற்கனவே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தில் 33% குறைப்பை வழங்குவதாக உறுதியளித்த அரசாங்கம், தற்போது 11% க்கும் அதிகமான கட்டண உயர்வை நாடுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 24 ஆம் திகதியிடப்பட்ட மின்சார சபையின் கட்டணத் திருத்த முன்மொழிவை மேற்கோள் காட்டி அவர் மேலும் கூறுகையில்: தற்போதைய கட்டண நிலைகள், எரிபொருள் இருப்பு மற்றும் விலைகள், நீர் வரத்து, மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்பு அட்டவணைகள், மின் தேவை, வட்டி விகிதங்கள், பொருளாதார மீட்சிப் போக்குகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் உள்ளிட்ட காரணிகளை மதிப்பீடு செய்த பின்னரே இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 13,094 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிட்டுள்ள மின்சார சபை, அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட 11.57% கட்டண அதிகரிப்பை முன்மொழிந்துள்ளது. மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாகும் மேலதிகத் தொகை அல்லது பற்றாக்குறை, அடுத்த கட்டணத் திருத்தத்தின் போது சரிசெய்யப்படும் என்றும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்த தம்மிக்க, புத்தாண்டுக்கான முதல் பரிசாக மின்சாரக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறினார். மின்சார சபை முன்னதாக தவறான தரவுகளை சமர்ப்பித்து லாபம் ஈட்டியதாக அறிக்கை வெளியிட்டது என்றும், இப்போது அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த முற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மழைக்காலத்தில் நீர்மின் உற்பத்தியை சிறப்பாக நிர்வகித்திருந்தால் இந்த கட்டண உயர்வைத் தவிர்த்திருக்கலாம் என்றும், இது இயற்கை வளங்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தோல்வி என்றும் அவர் விவரித்தார்.