BBC
எனது தம்பி உள்ளே இருப்பதாக நான் நினைத்தேன், அதனால் மக்கள் வெளியேற உதவுவதற்காக ஜன்னலை உடைக்க முயன்றேன், அதன் பிறகு உள்ளே சென்றேன்.”

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) சுற்றுலாத் தளத்தில் உள்ள ஒரு மதுபானச்சாலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து, ஒரு கொண்டாட்ட இரவை எவ்வாறு நரகமாக மாற்றியது என்பது குறித்து 18 வயது இளைஞர் ஒருவர் பிபிசியிடம் பேசினார்.
வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில் ‘லீ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) எனும் பாரில் தீ பரவியதில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த இளைஞர் கூறுகையில், மதுபானசாலை அருகே இருந்தபோது ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெரும் புகை மூட்டம் எழுந்ததாகவும் தெரிவித்தார். மற்றவர்கள் வெளியேற முயன்றபோது, அவர் தனது தம்பியைத் தேடி உள்ளே சென்றார். உள்ளே அவர் கண்ட காட்சிகள் பயங்கரமானவை.

“பலர் எரிந்துகொண்டிருப்பதை நான் கண்டேன்… தலை முதல் கால் வரை ஆடைகள் எதுவுமின்றி உடல் கருகிய நிலையில் பலர் காணப்பட்டனர்ம என்று அவர் கூறினார். அதிர்ஷ்டவசமாக அவரது தம்பி காயமின்றி தப்பினார். “இந்த வாரம் தினமும் நான் அந்த மதுபானசாலை சென்றேன் – நான் போகாத அன்று அது எரிந்துவிட்டது,” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
சுமார் 300 பேர் அமரக்கூடிய வசதியுள்ள அந்த மதுபானசாலையில், தீ விபத்து ஏற்பட்டபோது எத்தனை பேர் இருந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை. எம்மா மற்றும் அல்பேன் என்ற இரு பிரஞ்சுப் பெண்கள் கூறுகையில், ஒரு பணிப்பெண் ஷாம்பெயின் பாட்டில்களின் மேல் ‘பிறந்தநாள் மெழுகுவர்த்திகளை’ (Sparklers) ஏற்றி வைத்தபோது தீபரவத்தொடங்கியதாகத் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தனர். “சில நொடிகளில் மேற்கூரை முழுவதும் தீப்பிடித்தது. அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் தீ மிக வேகமாகப் பரவியது,” என்று அவர்கள் கூறினர்.
வெளியேறும் வழி குறுகலாக இருந்ததால் தப்புவது மிகவும் கடினமாக இருந்ததாகவும், சுமார் 200 பேர் 30 வினாடிகளுக்குள் வெளியேற முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மற்றொரு இளைஞர், ஒரு “நெருப்புச் சுவரிடமிருந்து” தப்பிக்க ஒளிந்து கொண்டு, பின்னர் தனது காலால் ஜன்னலை உடைத்து உயிர் தப்பியதாகக் கூறினார்.
அருகிலுள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு விரைவாக நிரம்பியதால், சில நோயாளிகள் அண்டை நாடான இத்தாலியின் மிலன் நகரத்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணியான ஓலே பாஸ்கா கூறுகையில், வெடிப்புச் சத்தம் கேட்டபோது முதலில் அவை பட்டாசுகள் என்று நினைத்ததாகவும், பின்னர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் சைரன் சத்தங்களைக் கேட்ட பிறகே விபரீதத்தைப் புரிந்துகொண்டதாகவும் கூறினார். மிலனைச் சேர்ந்த டேனியலா என்ற பெண், “மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு இளைஞன் என்னிடம் வந்து தான் நரகத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறினான். இரவு முழுவதும் அந்த அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது,” என்றார்.
இத்தாலியத் தூதர் கூறுகையில், உயிரிழந்தவர்களின் உடலில் பலத்த தீக்காயங்கள் இருப்பதால் அவர்களை அடையாளம் காண வாரக்கணக்கில் ஆகலாம் எனத் தெரிவித்தார். தங்களது அன்புக்குரியவர்களைப் பற்றிய செய்திக்காக உறவினர்களும் நண்பர்களும் இப்போதும் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
