டிட்வா (Ditwah) சூறாவளி ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) அண்மையில் மேற்கொண்ட கள விஜயத்தின் மூலம், நிவாரணம் மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளில் பெரும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. களத்திலுள்ள நேரடி அவதானிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூகக் குழுக்களினால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. ஹைபொரஸ்ட் (Highforest) மற்றும் ஸ்பிரிங் வலி (Spring Valley) போன்ற இடங்களில், குடும்பங்கள் இன்னும் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணங்களுக்காகக் காத்திருப்பதுடன், ஆழமான கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் பல சமூக-பொருளாதார சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
முக்கியமான வானிலை எச்சரிக்கைகள் மூன்று மொழிகளிலும் கிடைக்காத காரணத்தினால், அவை அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பது ஒரு பெரும் கவலையாக உள்ளது. மிகவும் நலிந்த மக்களுக்கு உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவசரமான மற்றும் நீதியான பதிலை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். மீ மீட்பு நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுடன், எவரும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தெளிவான தகவல் பரிமாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும்என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளதுடன் அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது






மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA), டிட்வா (Ditwah) சூறாவளிக்குப் பிந்தைய மனித உரிமைகள் மற்றும் நிர்வாகச் சூழலையும், பல மாவட்டங்களில் நிலவும் கள யதார்த்தத்தையும் கண்காணித்து வருகின்றது. CPA குழுவொன்று 2026 ஜனவரி 5 முதல் 8 வரை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியது. தனது கண்டுபிடிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட CPA திட்டமிட்டுள்ள போதிலும், உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அவசரமான விடயங்களைக் கருத்திற் கொண்டு இந்தக் கடிதத்தை வழங்குகின்றது.
உங்களின் உடனடிப் பரிசீலனைக்காக பின்வரும் முக்கிய விடயங்களை நாங்கள் முன்வைக்கின்றோம்:
1. எச்சரிக்கைகள் மற்றும் உதவிகள் குறித்த பொதுத் தகவல் மற்றும் விழிப்புணர்வு பற்றாக்குறை
பாதிக்கப்பட்ட சமூகங்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் உள்ளூர் குழுக்களுடன் CPA உரையாடியபோது, தகவல் பரிமாற்றத்தில் தொடர்ச்சியான இடைவெளிகள் மற்றும் மொழி ரீதியான முரண்பாடுகள் இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். இரண்டு மாகாணங்களிலும் புதிய வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில சமூகங்களுக்கு அந்த எச்சரிக்கைகள் குறித்துத் தெரியாமல் இருப்பது இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது. அனைத்து எச்சரிக்கைகளையும் உடனடியாக மூன்று மொழிகளிலும் வெளியிடுமாறும், தற்காலிக முகாம்கள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் உள்ள மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் இந்தத் தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளை CPA வலியுறுத்துகின்றது.
2. அரசாங்க உதவிகள் கிடைப்பதில் உள்ள தாமதம்
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25,000 ரூபா மற்றும் 50,000 ரூபா நிதியுதவி உட்பட எந்தவொரு அரசாங்க உதவியும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என இரு மாகாணங்களிலும் உள்ள பல சமூகங்கள் தெரிவித்தனர். உதாரணமாக, ஹைபொரஸ்ட் (Highforest) பகுதியில் உள்ள பிரேம்லி தோட்ட (Bramley Estate) மக்கள், சூறாவளி ஏற்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் எவ்வித உதவியையும் பெறவில்லை. தோட்டப்பகுதிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மக்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரையும் சென்றடைய முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகின்றோம்.
3. உட்கட்டமைப்பு உதவிகளில் தாமதம்
CPA குழுவினால் பார்வையிடப்பட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள், சமூகக் கட்டிடங்கள் மற்றும் ஏனைய பகுதிகள் இன்னும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. மேலதிகமாக, பல வீதிகள் இன்னும் சீர்செய்யப்படாததால் பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பல தோட்டங்களில் வீதிகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளன. வானிலை மோசமடைந்து வரும் நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குத் திரும்புமாறு சில பகுதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக CPA-க்குத் தெரிவிக்கப்பட்டது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) களத்திலுள்ள அபாயகரமான நிலைமைகளைப் புறக்கணித்து வழங்கியுள்ள சில கண்டுபிடிப்புகளால் இந்தச் சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் விரிவான இடர் மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறும், தொடர்ச்சியான ஆபத்துகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும், மாற்று நிலங்களை அடையாளம் கண்டு மீள்கட்டுமானம் மற்றும் மீட்புப் பணிகளில் மோதல் உணர்திறன் கொண்ட அணுகுமுறையை (Conflict sensitive approach) பின்பற்றுமாறும் CPA வலியுறுத்துகின்றது.
4. கல்வித் தேவைகளுக்கான அவசரக் கவனம்
இடம்பெயர்வு, பாடசாலைகள் இயங்காத நிலை, அபாயகரமான சூழலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம், வகுப்பறைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் அழிவடைந்தமை போன்ற காரணங்களால் பல பகுதிகளில் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் இருப்பதை பல சமூகங்கள் சுட்டிக்காட்டின. கல்வித் துறையில் எழுந்துள்ள அவசரப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் சமூகங்களுக்கு உதவவும், பாதுகாப்பான இடங்களில் தற்காலிக பாடசாலைகளை அமைக்கவும், சேதமடைந்த கல்வி வசதிகளை உடனடியாகப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
5. உணவு, நீர், சுகாதாரம், தங்குமிடம் மற்றும் வாழ்வாதார உதவிகள்
மேற்குறிப்பிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான வளங்கள் போதியளவு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் CPA-விடம் தெரிவித்தனர். குறிப்பாக பதுளை – ஸ்பிரிங் வலி (Spring Valley) மற்றும் நுவரெலியா – ஹைபொரஸ்ட் போன்ற பகுதிகளில் மக்கள் முறையான நீர் மற்றும் சுகாதார வசதிகள் இன்றி மிகவும் மோசமான தற்காலிக தங்குமிடங்களில் வாழ்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிய வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், அடிப்படைச் சேவைகள் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. எனவே, இந்தச் சமூகங்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. முரண்பாடுகள் மற்றும் தாமதங்களால் அரசாங்க சேவைகள் மீதான நம்பிக்கையீனம்
பல சமூகங்கள் இதுவரை உதவிகளைப் பெறவில்லை அல்லது வழங்கப்பட்ட சேவைகளில் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளனர் என்பதை CPA அவதானித்தது. பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் போன்ற நலிந்த பிரிவினர் எதிர்கொள்ளும் பின்னடைவுகள் குறித்தும் கவலைகள் உள்ளன. குறிப்பாக, மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலர் கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மையால் பல சமூக மற்றும் நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுடனும் தொடர்புகொண்டு சமத்துவம், பாரபட்சமின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையில் உதவிகளை எளிதாக்குவதற்கு அதிகாரிகள் தலைமைத்துவம் வழங்குவது மிக அவசியமாகும்.
மேற்குறிப்பிட்ட உடனடி கவலைகளுக்கு மேலதிகமாக, இன்னும் பல விடயங்கள் CPA குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன, அவை விரைவில் அதிகாரிகளுடன் பகிரப்படும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உங்களுடன் ஆக்கபூர்வமாக இணைந்து செயல்பட நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
