போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், ஐந்து சந்தேக நபர்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.
போரலெஸ்கமுவ, மகரகம, நித்தம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்புகளின் போது, துபாயில் வேலை வழங்குவதாகக் கூறித் தயாரிக்கப்பட்ட 10 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், 27 விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மோசடி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினி என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரசாங்கப் பாடசாலைகளின் அதிபர்கள், பல அரச நிறுவனங்களின் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பெயர்களைக் கொண்ட ஏராளமான போலி உத்தியோகபூர்வ முத்திரைகளையும் (Seals) புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
அத்துடன், மோசடியாகத் தயாரிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாடசாலை விலகல் சான்றிதழ்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
