கட்டுமானத் துறையில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை- நிலவுவதாகக் கூறி, சுமார் 7,500 வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு முன்னணி கட்டுமான நிறுவனங்கள் அமைச்சின் அனுமதியைக் கோரியுள்ளதாக வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுது லால் போகஹவத்த நேற்று தெரிவித்தார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, கட்டுமானத் துறையில் கட்டுமானதுறைக்கு சுமார் 10000க்கும் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுவது தெரியவந்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இந்தத் தொழிலாளர்களை இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து அழைத்து வர நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன என்றும், ஏற்கனவே சில தொழிலாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
உள்ளூர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள்
சட்டங்களை விதிப்பதன் மூலம் இதனைத் தடுக்க அமைச்சு எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த போகஹவத்த, வெளிநாட்டுத் தொழிலாளர்களை விடத் திறமையாகச் செயற்படும் வகையில் உள்ளூர் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்:
-
NVQ சான்றிதழ்: கட்டுமானத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை (CIDA), உள்ளூர் தொழிலாளர்களுக்குத் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய NVQ சான்றிதழை வழங்கி, அவர்களைத் தொழில்முறை மட்டத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து செல்ல முடியும்.
-
வேலை பாதுகாப்பு: இளைஞர்களை இத்துறைக்கு ஈர்க்கும் வகையில், நிலையான வருமானம் மற்றும் உறுதியான எதிர்காலத்தை உறுதி செய்ய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் கட்டுமானத் துறைக்கு மொத்தம் 20,000 தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
