இந்த வாரம் இலங்கைக்கு குறுகிய காலப் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா, “காட்டுச் சட்டத்தின்” (Law of the jungle) மீளுருவாக்கத்தை எதிர்க்கவும், அனைத்து வகையான அதிகார அரசியலையும் அடக்குமுறைகளையும் எதிர்க்கவும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (12) இலங்கையில் ஒரு இடைத்தங்கல் பயணத்தின் போது, தனது இலங்கை சகபாடான விஜித ஹேரத்தை சந்தித்து அவர் கலந்துரையாடினார். இது குறித்து சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) வெளியிட்டுள்ள செய்தியில்:
-
“பெருகி வரும் சிக்கலான மற்றும் நிலையற்ற சர்வதேச சூழ்நிலையில், வளரும் நாடுகளின், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை சீனா உறுதியுடன் பாதுகாக்கும்” என வாங் யி தெரிவித்தார்.
-
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை சீனா நிலைநிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியிலான கருத்துக்கள்
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இராணுவப் படையெடுப்பை மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்த சில நாட்களிலேயே வாங் யியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் போராட்டங்களை ஒடுக்கியதற்காக அந்த நாட்டிற்கு எதிராக கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ள ட்ரம்ப், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத அபராத வரியையும் அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், “காட்டுச் சட்டத்தின் மீளுருவாக்கத்தை எதிர்க்கவும், அதிகார அரசியல் மற்றும் மிரட்டல்களை முறியடிக்கவும், பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச நேர்மை மற்றும் நீதியைப் பாதுகாக்கவும் சீனா ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படும்” என்று வாங் யி மேலும் வலியுறுத்தியுள்ளார்.