ஜனவரி 16, 2026
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசாங்கத்தைத் தாக்குவதற்காகச் சில குழுக்களுடன் கைகோர்த்துச் செயல்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இது குறித்து மிகவும் கவனமாகச் சிந்திக்க வேண்டும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் மீதான விமர்சனங்கள், குறிப்பாக பாடப்புத்தகங்களின் (modules) அட்டைகளில் உள்ள வானவில் நிறங்கள் (rainbow colours) தொடர்பான சமீபத்திய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
“ஒரு பாடப்புத்தகத்தின் அட்டையில் வானவில் சித்தரிக்கப்பட்டிருப்பது பற்றி ஒரு செய்தியைக் கண்டேன். அதன் வெளிப்பக்க நிறங்கள் வானவில்லின் நிறங்கள் அவ்வளவே. இத்தகைய பேச்சுக்களை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? இது விமர்சனம் அல்ல. இது எந்த வகையிலும் ஆக்கபூர்வமானது அல்ல. இது மிகவும் கீழ்த்தரமானது (vile); மிகவும் கொடூரமானது (vicious). 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் இந்நாட்டு மக்கள் நிராகரித்த அரசியல் இதுதான்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விமர்சனங்களுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் அமரசூரிய, அரசியல் காரணங்களுக்காகச் சில தரப்பினருடன் இணைந்து அரசாங்கத்தைத் தாக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தாங்கள் எத்தகைய சக்திகளுடன் கைகோர்க்கிறோம் என்பது குறித்தும், அதன் மூலம் தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
மேலும், ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், இவ்விடயத்தில் அரசாங்கம் உரிய முறையில் பதிலளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்