இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தனது சுமார் நான்காண்டு கால பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த உதவிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் மன உறுதியைப் பாராட்டிய அவர், அந்நாட்டு மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தன்னுடைய பிரியாவிடை உரையை ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ள தூதுவர் சங், தனது சேவைக் காலத்தில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டினார். “கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றியதை ஒரு பெருமையாகக் கருதுகிறேன். நான் விடைபெறத் தயாராகும் வேளையில், எனது பணிக்காலத்தில் அமெரிக்க-இலங்கை உறவை முன்னெடுத்துச் செல்ல ஆதரவளித்த மற்றும் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றியுள்ளவளாக இருப்பேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவிக்காலத்தை நினைவுகூர்ந்த அவர், “இலங்கை முழுவதும் உள்ள மக்களுடன் இணைந்து, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தினோம், பொருளாதாரத் தொடர்புகளை விரிவுபடுத்தினோம். அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளையும் பாதுகாப்பானதாகவும் வலுவானதாகவும் மாற்றும் ஒரு கூட்டாண்மையை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்,” எனக் கூறினார்.
மேலும், “எமது பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளில் வேரூன்றிய இந்த இருதரப்பு உறவு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்து இன்றியமையாததாக இருக்கும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த ஜூலி சங், நாடு கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் கையாண்டதை நேரில் கண்டதாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் இலங்கை மக்களின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய அவர், ஸ்திரத்தன்மை, மீட்சி மற்றும் வலுவான கூட்டாண்மையை உருவாக்க அமெரிக்கா உறுதியாகத் தோள் கொடுத்ததாகக் கூறினார். “இங்கு தூதுவராகப் பணியாற்றியது எனது வாழ்வின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்று,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தனது பதவிக்காலத்தின் முக்கிய மைல்கற்களாக, அமெரிக்க-இலங்கை உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு விழா, பாதுகாப்பு மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, இலங்கை மக்களிடம் விடைபெற்ற அவர், “உங்களது கலை, கதைகள், மன உறுதி மற்றும் உணர்வுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். நான் விடைபெறும்போது, நாம் சாதித்தவற்றைக் கண்டு பெருமிதத்துடனும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையுடனும் செல்கிறேன். இலங்கையில் ஏதோ ஒரு உண்மையான மந்திரம் (magic) இருக்கிறது,” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
2022 பெப்ரவரி மாதம் கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற ஜூலி சங், கிட்டத்தட்ட நான்கு ஆண்டு காலச் சேவைக்கு பின்னர் இன்று (ஜனவரி 16) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.
