2024-ஆம் ஆண்டில் தோல்வியடைந்த இராணுவச் சட்ட (Martial Law) நடவடிக்கையின் போது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை, நீதியைத் தடுத்தமை மற்றும் ஆவணங்களை மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரியஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது அதிர்ச்சியூட்டும் இராணுவச் சட்டப் பிரகடனம் தொடர்பாக நடைபெற்று வரும் நான்கு விசாரணைகளில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இதுவாகும். அந்த நடவடிக்கை குறுகிய காலமே நீடித்த போதிலும், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து சென்று யூனின் முடிவை ரத்து செய்தபோது பெரும் போராட்டங்களையும் தூண்டியது.
“யூனின் நடவடிக்கைகள் நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன” என்று குறிப்பிட்ட நீதிபதி, அவர் “தொடர்ச்சியாக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை” என்பதையும் வெள்ளிக்கிழமையன்று சுட்டிக்காட்டினார்.
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, யூனின் ஏனைய வழக்குகள் எவ்வாறு அமையக்கூடும் என்பதற்கான குறிப்புகளை வழங்குகிறது. அவர் மீது அதிகார துஷ்பிரயோகம் முதல் தேர்தல் சட்ட மீறல்கள் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் மிக முக்கியமான குற்றச்சாட்டு ‘கிளர்ச்சி’ (Insurrection) ஆகும், இதற்காக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு வெளியே யூனின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் கூடி, ஒரு பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.
அவர்களில் சிலர், “மீண்டும் யூன்! கொரியாவை மீண்டும் சிறந்ததாக்குவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய சிவப்பு பதாகைகளை ஏந்தியிருந்தனர். நீதிபதி தீர்ப்பை வழங்கியபோது சிலர் கூச்சலிட்டனர், மற்றவர்கள் சோகமாகத் காணப்பட்டனர்.