சினமன் கிராண்ட் கொழும்பு ஹோட்டல், யாழ்ப்பாணத்தின் ஆன்மாவை நகரத்தின் மையப்பகுதிக்கு கொண்டு வரும் வகையில், ‘The Jaffna Table’ எனும் சிறப்பு உணவு மேம்பாட்டுத் திட்டத்தை (Nuga Gama) தொடங்கியுள்ளது. இது யாழ்ப்பாணத்தின் துணிச்சலான சுவைகள், ஆழமாக வேரூன்றிய மரபுகள் மற்றும் செழுமையான சமையல் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.
Nuga Gama கிராமிய சூழலுக்குள் விருந்தினர்கள் நுழையும் கணமே, அவர்கள் வடக்கு நோக்கிய ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வறுத்த மசாலாப் பொருட்களின் மணம், மெதுவாக சமைக்கப்பட்ட கறிகள் மற்றும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பலகாரங்களின் நறுமணம் ஆகியவை காற்றில் நிறைந்து, மறக்க முடியாத ஒரு விருந்து அனுபவத்திற்கு களம் அமைக்கின்றன.
யாழ்ப்பாணச் சமையலின் உண்மையான சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘The Jaffna Table’, பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் தனித்துவமான உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உண்மையான உணவுகளின் ஈர்க்கக்கூடிய வரிசையைக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கே உரிய பிரத்யேக தோசை கவுண்டரில் மொறுமொறுப்பான தோசைகள் அதற்கேற்ற பாரம்பரியத் துணைகறிகளுடன் பரிமாறப்படுகின்றன. அதேவேளை, வடக்கின் அடையாளமான கடல் உணவு சூப் வகை – ஒடியல் கூழ் போன்ற கையொப்ப உணவுகள் முதன்மை இடத்தைப் பிடிக்கின்றன.
யாழ்ப்பாண பாணி ஆட்டிறைச்சி கறியான இறைச்சி பிரட்டல் மற்றும் மசாலாக்கள் செறிந்த நண்டு கறி போன்ற செழுமையான உணவுகள், இப்பிராந்தியத்தின் துணிச்சலான சுவைகள் மற்றும் நிதானமான சமையல் முறை (slow cooking) மீதான காதலை வெளிப்படுத்துகின்றன.
ஒவ்வொரு உணவும் ஒரு கதையைச் சொல்கிறது – தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட பாரம்பரியம், மீள்தன்மை மற்றும் பெருமை ஆகியவற்றின் கதை அது. இந்த அனுபவம் பனைப்பணியாரம், சீனி முறுக்கு மற்றும் இதமான பாயாசம் போன்ற பாரம்பரிய யாழ்ப்பாண இனிப்புகளுடன் நிறைவடைகிறது.
இந்த மாலைப் பொழுதிற்கு மேலும் மெருகூட்டும் வகையில், MasterChef Sri Lanka நிகழ்ச்சியின் நடுவர்களான பீட்டர் குருவிதா, சவிந்திரி பெரேரா, ரோஹன் பெர்னாண்டோபுள்ளே மற்றும் கபில ஜயசிங்க ஆகியோரைச் சந்திக்கும் பிரத்யேக வாய்ப்பும் வழங்கப்பட்டது. நாட்டின் மிகச்சிறந்த சமையல் வல்லுநர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்த நிகழ்வு, உணவுப் பிரியர்களுக்கும் வளர்ந்து வரும் சமையல் கலைஞர்களுக்கும் உற்சாகமான சூழலை உருவாக்கியது.
இந்த முன்னெடுப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கிளஸ்டர் எக்ஸிகியூட்டிவ் செஃப் கபில ஜயசிங்க, யாழ்ப்பாணச் சமையல் அதன் வலுவான சுவைகள் மற்றும் ஒழுக்கமான நுட்பங்களால் வரையறுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். “The Jaffna Table மூலம், அதன் உண்மைத்தன்மையை நிலைநாட்டவும், வட இலங்கை சமையலின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் உணவுகளை மீண்டும் உருவாக்கவும் நாங்கள் விரும்பினோம்,” என்று அவர் கூறினார்.
The Jaffna Table இரவு உணவு நேரப் புஃபே (buffet), 2026 ஜனவரி 23 முதல் 30 வரை, இரவு 7.00 மணி முதல் 10.30 மணி வரை சினமன் கிராண்ட் கொழும்பின் நுாகா காமாவில் கிடைக்கும். இதன் விலை ஒரு நபருக்கு நிகர விலையாக (Nett) 7,500 இலங்கை ரூபாய் ஆகும்.
