21 ஜனவரி 2026
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகத் தங்கள் நாட்டு அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யுமா என்பது குறித்து, பங்களாதேஸ் அரசாங்கத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க பங்களாதேஸ் கட்டுப்பாட்டுச்சபைக்கு (BCB) ஐசிசி இன்னும் ஒரு நாள் கால அவகாசம் அளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டிபங்களாதேஸ் தொடர்ந்து இந்தியாவுக்கு செல்லமறுத்தால், தரவரிசை அடிப்படையில் அவர்களுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியை உலகக் கோப்பையில் சேர்க்க ஐசிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் பெரும்பாலான இயக்குநர்கள் இந்த முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தியாவுக்குப் பதிலாக இலங்கையில் விளையாட வேண்டும் என்ற வங்காளதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 15 இயக்குநர்களில் பாகிஸ்தான் (PCB) மட்டுமே வங்காளதேசத்திற்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி-யின் அறிக்கை:

கூட்டத்திற்குப் பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
-
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: “சுயாதீனமான ஆய்வுகள் உட்பட அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்தவொரு மைதானத்திலும் பங்களாதேஸ் வீரர்கள், ஊடகவியலாளர்கள் அல்லது ரசிகர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”
-
முன்னுதாரணமாகிவிடும்: “முறையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத நிலையில், தொடர் தொடங்குவதற்கு மிக நெருக்கமான நேரத்தில் அட்டவணையை மாற்றுவது சாத்தியமற்றது. இது போன்ற மாற்றங்கள் எதிர்கால ஐசிசி தொடர்களின் நடுநிலைமையை பாதிக்கும் மற்றும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.”
-
விளக்கம்: “மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்கத்துறையின் விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து பங்களாதேஸ் கட்டுப்பாட்டுச்சபைக்குஏற்கனவே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.”
பின்னணி என்ன?
ஜனவரி 4-ம் தேதி, பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்குத் தங்கள் அணியை அனுப்ப முடியாது என வங்காளதேச அரசு ஐசிசி-க்கு கடிதம் எழுதியிருந்தது. 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு பிசிசிஐ (BCCI) உத்தரவிட்டதைத் தொடர்ந்தே, வங்காளதேசம் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாகக் கருதப்படுகிறது.
வங்காளதேசம் தனது லீக் போட்டிகளை இலங்கையில் விளையாட அனுமதிக்க வேண்டும் அல்லது அயர்லாந்து போன்ற இலங்கையில் விளையாடும் அணிகளுடன் தங்கள் பிரிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கைகளை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
“ஒரே ஒரு வீரர் உள்ளூர் லீக் போட்டியில் விளையாடுவது தொடர்பான தனிப்பட்ட மற்றும் தொடர்பற்ற ஒரு விஷயத்தை, உலகக் கோப்பை பாதுகாப்புடன் வங்காளதேசம் இணைத்துப் பேசுகிறது. இதற்கும் உலகக் கோப்பை பாதுகாப்பு கட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று ஐசிசி கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
வங்காளதேசத்தின் போட்டி அட்டவணை (மாற்றப்படாவிட்டால்):
வங்காளதேச அணி ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் தங்களது முதல் மூன்று போட்டிகளை கொல்கத்தாவிலும் (பிப்ரவரி 7, 9 மற்றும் 14), கடைசிப் போட்டியை மும்பையிலும் (பிப்ரவரி 17) விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளைக்குள் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், உலகக் கோப்பையில் வங்காளதேசத்தின் இடத்தை ஸ்காட்லாந்து பிடிக்கும்.