2026 பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை | முற்பகல் 09:05
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையுடன் (UN) தொடர்புடைய “இழப்பு மற்றும் சேதங்களுக்கான நிதியத்தின்” (Fund for Responding to Loss and Damage) மூலம் நிதி உதவியைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம், நிலையான அபிவிருத்தி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து பணியாற்றும் Slycan Trust என்ற சிந்தனைக் குழுவினால் (Think Tank) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்றத்தில் உரையாற்றிய சுற்றுச்சூழல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் சமனி குமாரசிங்க, இந்த நிதியைப் பெறுவதற்கான விண்ணப்பத் தயாரிப்புகளை இலங்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் காலநிலை பேரழிவுகள், நிதி வழங்கல் மற்றும் மேலாண்மை தொடர்பான ஆறு ஆண்டு கால திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பில் இந்த மன்றம் நடைபெற்றதாக Slycan Trust அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் அறிவு மேலாண்மை பணிப்பாளர் டெனிஸ் மொம்பாவ் தெரிவித்தார்.
“காலநிலை நிதி, குறிப்பாக இழப்பு மற்றும் சேதங்களுக்கான நிதி மற்றும் பேரிடர் இடர் நிதி போன்றவற்றின் உலகளாவிய நிறுவன ரீதியான மாற்றங்களுக்கு மத்தியில் இது மிகவும் பொருத்தமான தருணமாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இழப்பு மற்றும் சேதங்களுக்குப் பதிலளிப்பதற்கான நிதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதுடன், முன்மொழிவுகளுக்கான (Proposals) அதன் முதலாவது அழைப்பையும் விடுத்துள்ளது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விண்ணப்பத்தின் மூலம் இலங்கைக்கு சுமார் 20 முதல் 25 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நிதியைப் பெற வாய்ப்புள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கீழ் பணியாற்றும் நிபுணர் ரோஹன் கூரே தெரிவித்தார்.
