மேரியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கைபேசி பயன்பாடு குறித்த பல ஆண்டுகால கவலை, 2025 ஜூன் மாதம் ஒரு உச்சத்தை எட்டியது. அப்போதுதான் அவருக்கு இணையதள காதலன் ஒருவர் இருப்பதை அவரது பெற்றோர் கண்டுபிடித்தனர்.
தற்போது 16 வயதாகும் மேரி, தனக்கு 15 வயது இருக்கும் போதிலிருந்தே இத்தகைய இரண்டு உறவுகளைக் கொண்டிருந்தார். இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ‘Roblox’ எனும் ஒன்லைன் விளையாட்டுத் தளம் மூலமாகவே இந்த இரண்டு சிறுவர்களையும் அவர் சந்தித்திருந்தார்.
சிங்கப்பூருக்கு வெளியில் இருக்கும் அந்தச் சிறுவர்கள் தனது வயதைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்த வீடியோ அழைப்புகள் மூலம் சரிபார்த்து, மிகுந்த எச்சரிக்கையுடனேயே பழகியதாக மேரி கூறினார். அவர் அவர்களை நேரில் சந்தித்ததில்லை.

குடும்ப விரிசல்
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மேரியின் பெற்றோர், அந்தத் தொடர்புகளைத் துண்டிக்குமாறு அவரை வற்புறுத்தினர். ஒருமுறை அவர் ரகசியமாகத் தொடர்ந்து மெசேஜ் செய்ததைக் கண்ட அவரது தந்தை, ஆத்திரத்தில் மேரியின் கைபேசியை அடித்து உடைத்தார்.
பெற்றோருடன் சண்டையிடும் போதெல்லாம் மேரி ஒன்லைன் நண்பர்களிடம் ஆறுதல் தேடுகிறார். இது வீட்டிற்குள் ஒரு பதற்றமான மற்றும் மகிழ்ச்சியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மேரியின் தாய், தனது விரக்தியில் மேரியை அவரது இரட்டைச் சகோதரியுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். “நான் அவளைப் போல அழகானவளோ, மெலிந்தவளோ அல்லது புத்திசாலியோ இல்லை. என் பெற்றோர் எங்களை ஒப்பிடும்போது நான் மிகவும் காயப்படுகிறேன்,” என்கிறார் மேரி.
டிஜிட்டல் அடிமைத்தனம்
தனது சுயதொழில் செய்யும் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு, மேரி தனது மாலை நேரங்களை TikTok, Instagram மற்றும் YouTube ஆகியவற்றில் செலவிடுகிறார். சில நாட்களில் அவரது திரை நேரம் (Screen time) 8 மணிநேரத்தைத் தாண்டுகிறது.
“நான் கைபேசியை அதிகமாகப் பயன்படுத்துகிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் நிறுத்த மனமில்லை. ஒன்லைன் நான் ஒரு சமூகத்தின் அங்கமாக இருப்பதை உணர்கிறேன், அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது,” என்கிறார் அவர். நிஜ வாழ்க்கையில் இருப்பவர்களை விட ஆன்லைன் நண்பர்கள் தன்னை நன்றாகப் புரிந்து கொள்வதாகவும், ஆஃப்லைனில் தான் தனிமையை உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.
ஆலோசனை மற்றும் சிகிச்சை
பெற்றோரின் வற்புறுத்தலால் மேரி தற்போது ‘MindfulBear’ எனும் குழந்தைகள் ஆலோசனை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மையத்தின் நிபுணர் திருமதி ஜியோன் ஹாங் கூறுகையில், “பூர்த்தி செய்யப்படாத உணர்ச்சித் தேவைகளே டீனேஜ் பிள்ளைகளை அதிகமாகக் கைபேசியைப் பயன்படுத்தத் தூண்டுகின்றன,” என்கிறார்.
மீண்டும் மீண்டும் கைபேசி பயன்பாட்டிற்குத் தள்ளப்படுவது (Relapse) குறித்து மேரி கூறுகையில், “இது ஒரு போதை போன்றது. நம்முடைய பீடில் (Feed) சிரிப்பதற்குப் புதிய விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன,” என்கிறார்.
பெற்றோரின் கவலை
மேரியின் 48 வயது தாய் கூறுகையில், “அவளுக்கு மிகச் சிறிய வயதிலேயே போன் கொடுத்ததற்காக நான் வருந்துகிறேன். இன்னும் கண்டிப்புடன் இருந்திருக்க வேண்டும்,” என்கிறார். மேரியின் குணாதிசயம் குறித்து அவர் கவலைப்படுகிறார். மேரி மிகவும் இரக்க குணம் கொண்டவர் என்பதால், யாராவது அவரை ஏமாற்றிவிடுவார்களோ என்று அவர் அஞ்சுகிறார்.
மேரியின் கனவு ஒரு சிறந்த சிகிச்சையாளராக (Therapist) மாறி, தற்கொலை எண்ணம் கொண்ட டீனேஜ் பிள்ளைகளுக்கு உதவுவதாகும். “நான் ஒரு நல்ல மகளாகவும், நல்ல மாணவியாகவும் இருக்க விரும்புகிறேன். எனக்கு இருக்கும் ஒரே பிரச்சினை இந்த போன் மட்டும்தான்,” என்கிறார் மேரி.
பெற்றோர்களுக்கான ஆலோசனைகள்:
-
காரணத்தைக் கண்டறியுங்கள்: பிள்ளைகள் ஏன் போனில் மூழ்கிக் கிடக்கிறார்கள்? அவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் கிடைக்காத எந்த அங்கீகாரம் ஆன்லைனில் கிடைக்கிறது?
-
விமர்சனத்தைக் குறையுங்கள்: நீங்கள் பேசும் விஷயங்களில் 90% திருத்தங்களாகவோ அல்லது விமர்சனங்களாகவோ இருந்தால், பிள்ளைகள் உங்களைத் தவிர்த்துவிட்டு ஆன்லைன் உலகிற்குச் செல்வார்கள்.
-
உறவை பலப்படுத்துங்கள்: திருத்தங்களைச் செய்வதற்கு முன் (Correction), பிள்ளைகளுடன் ஒரு நெருக்கமான தொடர்பை (Connection) ஏற்படுத்துங்கள்.