பொருளாதார கஷ்டங்கள் மாணவர்களை சிறுவர் உழைப்புக்கு தள்ளுவதாக தொழில்
அமைச்சு தெரிவித்துள்ளது; குறிப்பாக தோட்டத்துறை, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறைகளில் இது அதிகம் காணப்படுகிறது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சட்டவிரோதமான சிறுவர் உழைப்பில் ஈடுபடும்போது அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் பாடசாலை சீருடை அணிந்து வேலை செய்வதாக அமைச்சு கண்டறிந்துள்ளது.
இது குறித்து தொழில்ர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக சில குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் இவ்வாறான வேலைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல், பாடசாலையிலிருந்து திரும்பி வருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சீருடையுடன் வேலைகளில் ஈடுபடுவதை நாம் அவதானித்துள்ளோம்,” என்றார்.
மேலும், மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. இது தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தோட்டத்துறையிலேயே அதிகளவான சிறுவர் உழைப்பு பதிவாகியுள்ளதாக பியதிஸ்ஸ சுட்டிக்காட்டினார். “மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறையிலும் இந்த நிலை காணப்படுகிறது. ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் தனது பெற்றோருக்கு உதவி செய்வதை நாம் சிறுவர் உழைப்பாகக் கருதுவதில்லை. அதற்கு சில அளவுகோல்கள் உள்ளன. அத்தகைய வேலைகள் சிறுவர்களின் கல்வியையோ அல்லது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையோ பாதிக்கக் கூடாது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
