2026 பிப்ரவரி 3
கொழும்புசர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு (ABC) இ-கேட் (e-gates) இயந்திரங்கள் கடவுச்சீட்டுகளை (Passports) சரியாக ஸ்கேன் செய்யத் தவறியதால், வருகை தந்த பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கும் தாமதத்திற்கும் உள்ளாகினர்.
ஜப்பானிய அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட இந்த அதிநவீன அமைப்பின் தயார்நிலை குறித்து இது கேள்விகளை எழுப்பியுள்ளது.
(Advanced Passenger Information – API) அமைப்பில் பயணிகளின் தகவல்கள் விடுபட்டதே இந்த அசௌகரியத்திற்குக் காரணம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இ-கேட்கள் தானாகவே பயணிகளை அடையாளம் காண இந்த API தகவல் அவசியமாகும்.
இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜூட் பெர்னாண்டோ ‘ தெரிவிக்கையில், விமான எண்கள் மற்றும் பயணிகளின் விபரங்களைத் தானாகவே ஸ்கேன் செய்யும் வகையில் இந்த இ-கேட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார். இருப்பினும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடமிருந்து முழுமையான தரவுகள் சரியான நேரத்தில் கிடைக்காததால், பல பயணிகள் மீண்டும் கைமுறை (Manual) சோதனை கவுண்டர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
“API வசதி சரியாகவே இயங்குகிறது, ஆனால் விமான நிறுவனங்கள் பயணிகளின் தகவல்களை சரியான நேரத்தில் வழங்காததே பிரச்சினையாக உள்ளது,” என்று பெர்னாண்டோ விளக்கினார். “ஒவ்வொரு இ-கேட்டிலும் பயணிகளுக்கு உதவ அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தடங்கல்களுக்கு மத்தியிலும் இதுவரை சுமார் 20,000 கடவுச்சீட்டுகள் இந்த முறை மூலம் சரிபார்க்கப்பட்டுள்ளன.”
எல்லைக் கட்டுப்பாட்டை நவீனப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், குடிவரவு நடைமுறைகளை எளிதாக்கவும் முன்னெடுக்கப்படும் இந்த இ-கேட் முறை 2026 ஜனவரி 28 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் குரோஷியா போன்ற நாடுகள் இத்தகைய அமைப்புகளை முழுமையாக ஒருங்கிணைக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் ஏற்படும் பிழைகள் பதிவு புத்தகங்களில் குறிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், மனிதத் தவறுகளைக் குறைக்கவும் மற்றும் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த இ-கேட் அமைப்பு இலக்கு வைத்துள்ளது.
இந்த முயற்சி இலங்கையின் பிரதான சர்வதேச நுழைவாயிலில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்பைக் காட்டினாலும், ஆரம்பக்காலக் குளறுபடிகள் விமான நிலையமும் விமான நிறுவனங்களும் இந்தத் திட்டத்திற்குப் போதுமான அளவு தயாராக இருந்ததா என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளன.