2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் போது இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காமல் போகலாம் என்ற செய்திகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
-
விலகல் குறித்த கவலை: 2026 பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகக்கூடும் என்ற ஊடகச் செய்திகள் குறித்து இலங்கை கிரிக்கெட் கவலை தெரிவித்துள்ளது.
-
முழுமையான ஏற்பாடுகள்: ஒரு நடத்தும் நாடு (Host Nation) என்ற முறையில், பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் வணிக ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை ஏற்கனவே இறுதி செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதோடு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
-
பொருளாதார பாதிப்பு: இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ஒரு அணி பங்கேற்காமல் போனால், அது பெரும் நிதி இழப்பு, சுற்றுலா வருவாய் குறைவு மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை கிரிக்கெட் எச்சரித்துள்ளது.
-
சுற்றுலாத்துறை பாதிப்பு: பாகிஸ்தான் விளையாடாது என்ற செய்தியால், கொழும்பு ஹோட்டல்களில் ஏற்கனவே முன்பதிவுகள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது உலகக்கோப்பை காலத்தின் ஹோட்டல் வருமானத் திட்டமிடலை நேரடியாகப் பாதித்துள்ளது.
பழைய ஒத்துழைப்பை நினைவூட்டிய இலங்கை: மற்ற நாடுகள் பாகிஸ்தான் செல்லத் தயங்கிய இக்கட்டான மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க காலங்களிலும், விளையாட்டு உணர்வு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இலங்கை அணி பலமுறை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதை இலங்கை கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்றதொரு ஒத்துழைப்பை பாகிஸ்தானிடமிருந்தும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கை கட்டுப்பாட்டுச்சபை, பாதுகாப்பு மற்றும் நடுநிலைமை குறித்து முழுமையான உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.
இறுதிக் கோரிக்கை: உலகக்கோப்பை தொடர், பங்குதாரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காமல் இருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானிடம் இலங்கை கட்டுப்பாட்டுச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.