2026 பிப்ரவரி 6,
இலங்கை மீண்டும் ஒரு கடன் நெருக்கடியை சந்திக்காது என்றும், செலுத்தப்படாத வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் பணிகள் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்..
இலங்கை வர்த்தகச் சம்மேளனத்தின் (Ceylon Chamber of Commerce) நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், சில தரப்பினர் பரப்பி வரும் “2028 பீதி” (2028 phobia) என்ற கருத்தை நிராகரித்தார். அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் கடன் தவணைகளைச் செலுத்த முடியாது, இது மற்றொரு கடன் மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கும் என்ற பிரச்சாரத்தில் உண்மையில்லை என அவர் கூறினார்.
வெளிநாட்டு கையிருப்பு குறைந்ததன் காரணமாக 2022 இல் ஏற்பட்ட நெருக்கடிக்கு முன்னர் வரை, இலங்கை தனது கடன் கடமைகளை நிறைவேற்றுவதில் வரலாற்று ரீதியாக வலுவான நற்பெயரைக் கொண்டிருந்தது என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
“மற்றொரு மறுசீரமைப்பு அல்லது மற்றுமொரு கடன் செலுத்தத் தவறிய நிலை (default) பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான புரிதலாகும். இது இலங்கைக்கு கடன் வழங்கத் தயாராக இருக்கும் நாடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகத்தை உருவாக்குகிறது,” என்று ஆளுநர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில், 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தவணைகளுக்காகச் செலுத்தப்பட்டுள்ளன, இது மிகப்பெரிய கடன் கொடுப்பனவுகளில் ஒன்றாகும்.
மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு கையிருப்பை 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வருடாந்த கடன் தவணைகள் சுமார் 3.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு கடன் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
