: Bloomberg
பல ஆண்டுகளாக, ரஷ்யா தனது பணியாளர் பற்றாக்குறையை நிப்பப்ப மத்திய ஆசிய நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோரையே நம்பியிருந்தது. தற்போது, மக்கள்தொகை வீழ்ச்சி மற்றும் உக்ரைன் போர் காரணமாக பல தசாப்தங்களில் இல்லாத மிகக் கடுமையான தொழிலாளர் நெருக்கடியை ரஷ்யா சந்தித்து வருகிறது. இதனால், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளை நோக்கி ரஷ்ய வேலைவாய்ப்பு முகமைகள் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளன.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ரஷ்யப் பொருளாதாரத்திற்கு மேலும் 11 மில்லியன் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அதிபர் விளாடிமிர் புடின் புது தில்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்தப் பிரச்சனை முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது, தற்காலிக தொழிலாளர் இடப்பெயர்வு நடைமுறைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்பே, இந்தியர்களுக்கு ரஷ்யா வழங்கிய வேலைவாய்ப்பு அனுமதிகளின் எண்ணிக்கை 2021-ல் சுமார் 5,000 ஆக இருந்தது, 2025-ல் 56,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை உரிமங்களின் எண்ணிக்கை 2025-ல் 2,40,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இது 2017-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
முன்னாள் சோவியத் குடியரசான துர்க்மெனிஸ்தானில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வளர்ச்சியில் பெரும்பகுதி இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் சீனா போன்ற தொலைதூர நாடுகளிலிருந்தே வருகிறது. 2026-ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் பனி அகற்றுதல் போன்ற நகராட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, கட்டுமானத் தளங்கள், உணவகங்கள் மற்றும் இதர நகர சேவைகளிலும் அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
“ரஷ்ய தொழிலாளர் சந்தையில் ஒரு உண்மையான நில அதிர்வு போன்ற மாற்றத்தைக் காண்கிறோம்,” என்று மாஸ்கோவைச் சேர்ந்த ‘இன்ட்ரூட்’ (Intrud) வேலைவாய்ப்பு முகமையின் செயல்பாட்டு இயக்குநர் திருமதி எலினா வெல்யேவா தெரிவித்தார். இந்த முகமை வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. அவர் தற்போது இலங்கை மற்றும் மியான்மரிலும் தொழிலாளர்களைத் தேடி வருகிறார்.
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தி வரும் நிலையில், ரஷ்யா 1990-களின் பிறப்பு விகித வீழ்ச்சியில் இருந்தே மக்கள்தொகை நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தற்போது அங்கு வேலையில்லா திண்டாட்டம் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது (உலகிலேயே மிகக் குறைந்த அளவுகளில் ஒன்று). எனவே, வெளிநாடுகளில் இருந்து புதிய தொழிலாளர்கள் வராவிட்டால், ஏற்கனவே மந்தமாக இருக்கும் அதன் பொருளாதார வளர்ச்சி மேலும் முடங்கும் அபாயம் உள்ளது.
மத்திய ஆசியாவிலிருந்து விசா இல்லாமல் வருபவர்கள் அடிக்கடி வேலையை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், விசா மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் வரும் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் நிலைத்து இருப்பார்கள் என்பதால், ரஷ்ய நிறுவனங்கள் இப்போது அவர்களை ஈர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று வெல்யேவா கூறினார்.
இதற்காக, இந்திய நகரமான சென்னையில் வெல்டர்களுக்கான பயிற்சி மையத்தை இன்ட்ரூட் நிறுவனம் அமைத்துள்ளது. அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவிற்கு அனுப்பப்படுகிறார்கள். மற்ற சில முகமைகள் ஹோட்டல் தொழிலாளர்களுக்கு ரஷ்ய மொழியில் விரைவுப் பயிற்சிகளை வழங்குகின்றன.
மும்பையைச் சேர்ந்த ‘அம்பே இன்டர்நேஷனல்’ (Ambe International) இயக்குநர் திரு. அமித் சக்சேனா கூறுகையில், “இந்தியர்களைப் பணியமர்த்தும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா புதிதாக இணைந்துள்ளது. அங்கு தற்போது மனிதவளப் பற்றாக்குறை உள்ளது, எனவே இது ஒரு பொருத்தமான வாய்ப்பு,” என்றார்.
உக்ரைன் மீதான புடினின் போர் இந்தத் தொழிலாளர் பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போர்க்களத்திற்குச் சென்றவர்கள் ஒருபுறம் இருக்க, போர் பொருளாதாரம் காரணமாக சிவிலியன் துறைகளில் இருந்த தொழிலாளர்கள் ராணுவத் தொழில்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ராணுவத் திரட்டலில் இருந்து தப்பிக்கவும் சுமார் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான ரஷ்ய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ரஷ்யாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான ‘நோரில்ஸ்க் நிக்கல்’ (Norilsk Nickel), அதிக ஊதியம் வழங்கியும் சைபீரியா பகுதியில் சுமார் 10,000 பணியாளர்கள் பற்றாக்குறையுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறது. “திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை ரஷ்யத் தொழில்துறையின் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது,” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆசியாவிலிருந்து பணியாளர்களை நியமிப்பது முதலாளிகளுக்குச் செலவு குறைந்ததாகவும் உள்ளது. உதாரணமாக, ஒரு திறமையான இந்திய எலக்ட்ரீஷியன், ரஷ்யத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட 25 சதவீதம் குறைவான ஊதியத்திலேயே பணியாற்ற முன்வருகின்றனர்.

மேலும், வடகொரியாவுடனான நெருக்கமான உறவைப் பயன்படுத்தி அந்த நாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வரவும் ரஷ்யா முயற்சிக்கிறது. 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்ய கட்டுமானத் தளங்களில் மட்டும் சுமார் 50,000 வடகொரியத் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னார்வ மக்கள்தொகை ஆய்வாளர் இகோர் எஃபிமோவ் கூறுகையில், “ரஷ்யாவின் மக்கள்தொகை தொடர்ந்து வயதாகி வரும், இளைஞர்களின் எண்ணிக்கை குறையும். இது தொழிலாளர் சந்தையில் ஒரு தற்காலிக நெருக்கடி அல்ல, இது பல தசாப்தங்களுக்கு நீடிக்கப் போகும் ஒரு நீண்டகால நிலை. இதற்குப் பொருளாதாரம் பழகிக்கொள்ள வேண்டும்,” என்று எச்சரித்துள்ளார்.
