முல்லைத்தீவில் யாழ்பல்கலைக்கு ஒதுக்கப்பட்ட காணி அபகரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலப்பகுதியிலேயே, இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டு உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் கிளையை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும், என வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலின் போது, வவுனியாப் பல்கலைக்கழகம் மன்னாரில் தமது பீடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, முல்லைத்தீவில் எமக்கு ஒதுக்கப்பட்ட காணியில் செயற்பாடுகளை ஆரம்பிக்க நாம் தயாராகவே உள்ளோம். எனினும், போதிய நிதி ஒதுக்கீடுகள் இன்மை காரணமாகவே தாமதம் ஏற்பட்டது, எனத் தெளிவுபடுத்தினார்.
இதற்குத் தீர்வாக, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, பல்கலைக்கழகத்தின் ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகளுக்காக ஒரு தொகுதி நிதியை வழங்குவதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் இதன்போது உறுதியளித்தார்.
பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 44 ஏக்கர் காணிக்குரிய எல்லைகளை உடனடியாக அளவீடு செய்து, வேலி அமைக்கும் பணிகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் ஆரம்பிக்கும் எனத் துணைவேந்தர் உறுதியளித்தார்.
வேலி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலகம் வழங்கும் நிதி உதவியுடன் படிப்படியாகக் கட்டட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சார்பில் பிரதிநிதிகள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்