ஆசிரியர்: டெல்ஃபோர்ட் வைஸ் (Telford Vice)
உலகக் கோப்பை தொடரில் எட்டு அசோசியேட் (Associate) அணிகள் பங்கேற்கின்றன. ஸ்காட்லாந்து மக்கள் “மீண்டும் சிந்திப்பதற்காக” (tae think again) ஆட்களை வீட்டிற்கு அனுப்புகிறார்கள். கனடா மக்கள் “ஒளிரும் இதயங்களுடன் உனது எழுச்சியைக் காண்கிறோம்” என்று பாடுகிறார்கள். இத்தாலியர்கள் நேரடியாக விஷயத்திற்கு வருகிறார்கள்: “நாங்கள் இறக்கத் தயார்.” ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை அதன் நோக்கமே அதன் பெயர்தான்: “எனது நாடு, எனது நாடு, எனது நாடு, எனது நாடு.”
நேபாளிகள் “வீரர்களின் இரத்தம் அதை சுதந்திரமாகவும் அசையாததாகவும் மாற்றுகிறது” என்று நம்புகிறார்கள். நமீபியாவில், “வீரர்களின் தேசம், சுதந்திரப் போராட்டத்தை நாங்கள் வென்றுள்ளோம். யாருடைய இரத்தம் எமது சுதந்திரத்திற்கு நீர் பாய்ச்சியதோ அந்த வீரர்களுக்குப் புகழ் சேரட்டும்.” ஓமானியர்கள் “வானளவு உயர்ந்து, ஒளியால் பிரபஞ்சத்தை நிரப்ப” விரும்புகிறார்கள். அமெரிக்கர்கள், “அதிகாலை ஒளியில், அந்தி சாயும் வேளையில் நாம் பெருமையுடன் போற்றியதை காண முடிகிறதா?” என்று கேட்கிறார்கள்.

விளையாட்டு நிகழ்வுகளில் தேசிய கீதங்கள் பாடப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும், அந்த நடைமுறை நாம் யாரைக் கையாள்கிறோம் என்பதைப் பற்றிய ஒரு சிறு புரிதலை வழங்குகிறது.
மேலே உள்ள மேற்கோள்கள் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. அவை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 நாடுகளின் அணிகளில், எட்டு அணிகளின் தேசிய கீத வரிகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
அவர்கள் வெறும் எட்டு அணிகள் மட்டுமல்ல. அதிகாரப்பூர்வமாக அவர்கள் இந்தத் தொடரின் “அசோசியேட்” அணிகள். அதிகாரப்பூர்வமற்ற முறையில் அவர்கள் ‘மின்னோக்கள்’ (Minnows – சிறிய அணிகள்). அதாவது, இங்கு தொடர்பில்லாதவர்கள்; தங்களது பெரிய, சிறந்த சகோதரர்களால் தோற்கடிக்கப்படுவதற்காகவே வந்திருப்பவர்கள்; தங்களது பெரிய சகோதரர்களுடன் ஒரே களத்தைப் பகிர்ந்து கொள்ள தகுதியற்றவர்களாக இருந்தாலும், அவர்களுடன் சுவாசிக்க அனுமதிக்கப்பட்டதற்காக நன்றியுடனும் பெருமையுடனும் இருக்க வேண்டியவர்கள். ஆனால், இந்த சிறிய சகோதரர்கள் பெரும்பாலும் அதை ஏற்பதாக இல்லை.
சனிக்கிழமை ஈடன் கார்டன்ஸில், ஸ்காட்லாந்து அணிக்கு வெற்றி பெற 22 பந்துகளில் 50 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ரொமாரியோ ஷெப்பர்ட் ஐந்து பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
ஆனாலும், அடுத்த நாள் கொல்கத்தாவில் இத்தாலிக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ஸ்காட்லாந்து வேகப்பந்து வீச்சாளர் சஃபியான் ஷெரீப்பை ஒரு செய்தியாளர் மரியாதைக்குறைவாக நடத்தியதை அது தடுக்கவில்லை.
செய்தியாளரின் கேள்வி: “இந்தப் போட்டி மற்றும் உங்கள் முதல் டி20 உலகக் கோப்பையை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?” ஷெரீப்: “இது எனது முதல் உலகக் கோப்பை அல்ல. நான் சில உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளேன்.”
உண்மையில், தற்போதைய போட்டிக்கு முன்னதாக 2016, 2021, 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்காட்லாந்துக்காக ஷெரீப் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். செய்தியாளர்: “ஆமாம், மன்னிக்கவும். நான் உங்கள் விவரங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இத்தாலியைச் சேர்ந்தவர் என்று நினைத்துவிட்டேன்…”
அடையாளம் காணுவதில் ஏற்படும் தவறுகள் இத்துடன் முடிவடையவில்லை. ஞாயிற்றுக்கிழமை, இத்தாலியின் பயிற்சியாளர் ஜான் டேவிசனிடம், “ஆஸ்திரேலியாவின் ‘பி’ (B) அணி என்ற முத்திரைக்கு நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. இத்தாலி அணியின் ஆறு வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். ஆனால் ஒன்பது பேர் – அதாவது இருமடங்கு அதிகமானோர் – அங்கு பிறக்காதவர்கள். கணக்கை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
“நாங்கள் ஆஸ்திரேலியா ‘பி’ அணி என்று அழைக்கப்படுவதை நான் கேள்விப்படவில்லை, அது நாங்கள் கேட்க விரும்பும் ஒன்றும் அல்ல,” என்று கனடியரான டேவிசன் கூறினார். “நாங்கள் இத்தாலிய அணி, நீங்கள் பெரும்பாலான வீரர்களிடம் பேசினால் அவர்களின் இத்தாலிய வேர்களையும் அவர்கள் அந்த நாட்டுடன் கொண்டுள்ள பிணைப்பையும் காண்பீர்கள்.”
சனிக்கிழமை வான்கடே மைதானத்தில், அமெரிக்க அணி இந்தியாவை 12.4 ஓவர்கள் வரை திணறடித்தது, அப்போது இணை நடத்துனர்களான இந்தியா 77/6 என்ற நிலைக்குச் சரிந்தது. சூர்யகுமார் யாதவின் 49 பந்துகளில் 84 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காமல்) இந்தியாவை 161/9 என்ற பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு சென்று, 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தது.
ஒரு நாள் கழித்து அதே மைதானத்தில், இங்கிலாந்தை வீழ்த்த நேபாளத்திற்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டன. சாம் கர்ரன் அதை பாதியாகக் குறைத்தார். இது நேபாளிகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பைத் தவறவிட்ட வருத்தத்தைக் கொடுத்ததா அல்லது மிக நெருக்கமாக வந்ததால் நம்பிக்கையைக் கொடுத்ததா? “வருத்தம் மற்றும் பெருமை ஆகிய இரண்டையுமே நாங்கள் உணர்கிறோம்,” என்று நேபாள வேகப்பந்து வீச்சாளர் நந்தன் யாதவ் கூறினார். “ஏனென்றால் ஒரு சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் போட்டியிட்டோம், வெற்றியை மிக நெருங்கினோம்.”
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில், ஓமன் துடுப்பாட்ட வீரர் ஜதிந்தர் சிங் கூறுகையில்: “(டெஸ்ட் விளையாடும் நாடுகள்) சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் ஒரு நல்ல தரமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஆனால் அசோசியேட் நாடுகளாகிய நாங்களும் முழு உறுப்பினர்களுக்கு (Full Members) சளைத்தவர்கள் அல்ல. ஒரே விஷயம் என்னவென்றால், எங்களுக்கு அவர்களுக்கு எதிராக விளையாட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாங்கள் அடிக்கடி அவர்களுடன் விளையாடினால் எங்களது தரம் உயரும், அசோசியேட் நாடுகளிடமிருந்து ஒரு அற்புதமான கிரிக்கெட்டை நீங்கள் காண்பீர்கள்.”
அவர் சொல்வது தவறு அல்ல. ஓமன் 176 வெள்ளை-பந்து சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 10 போட்டிகள் (5.68%) மட்டுமே ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து தவிர்ந்த ஏனைய டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு எதிராக அமைந்தவை. அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர நீண்ட காலமாக முழு உறுப்பினர்களாக இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துடன் ஒருமுறை கூட விளையாடியதில்லை.
அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை, கனடா கேப்டன் தில்ப்ரீத் பஜ்வா கூறுகையில்: “அசோசியேட் நாடுகள் டெஸ்ட் நாடுகளுக்கு கடும் போட்டியைத் தருவதை இந்தத் தொடரில் பார்த்தோம். சில நேரங்களில் ஒரு முழுமையான பந்துவீச்சு அல்லது துடுப்பாட்ட வரிசை எங்களிடம் இருப்பதில்லை. ஆனால் அவற்றைச் சரியாகக் கட்டமைத்துவிட்டால், அசோசியேட் அணிகள் மிகவும் வலுவானதாக மாறும். நாங்கள் முன்னேறி வருகிறோம், எதிர்காலத்தில் முழு உறுப்பினர் நாடுகளை நாங்கள் வழக்கமாகத் தோற்கடிப்போம் என்று நினைக்கிறேன்.”
துரதிர்ஷ்டவசமாக, திங்களன்று இந்தச் சிறிய அணிகள் அந்தளவுக்கு வலுவாக இல்லை. கொல்கத்தாவில் மற்றுமொரு சிறிய அணியான ஸ்காட்லாந்திடம் இத்தாலி தோல்வியடைந்தது. ஸ்காட்லாந்தின் 207/4 ஓட்டங்களுக்கு எதிராக இத்தாலி 134 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கொழும்பில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஓமன் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடினாலும், அவர்கள் 103 ஓட்டங்களுக்கு சுருண்டனர். ஜிம்பாப்வே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அகமதாபாத்தில் திங்கள் இரவு நடந்த போட்டியில் கனடா ஒரு சாதனையைப் படைக்குமா? ஒளிரும் இதயங்களுடன் அவர்கள் சவாலை ஏற்றனர், ஆனால் தென்னாப்பிரிக்கா மிகவும் வலுவாக இருந்தது. முதலில் அவர்கள் 213/4 ஓட்டங்களைக் குவித்தனர் (இதுவரை இந்தத் தொடரின் அதிகபட்ச ஓட்டம்). பின்னர் லுங்கி என்கிடி தனது முதல் இரண்டு ஓவர்களில் 3/13 விக்கெட்டுகளை வீழ்த்தி கனடாவின் வெற்றியை அசாத்தியமாக்கினார். தென்னாப்பிரிக்கா 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருந்த போதிலும், என்கிடி கனடா அணியைப் பாராட்டிப் பேசினார்: “இன்று இரவு அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்தார்கள் என்று நினைக்கிறேன். பந்துவீச்சில் அவர்களால் அழுத்தம் கொடுக்க முடிந்தது மற்றும் நடுப்பகுதியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இது எந்தவொரு அணிக்கும் உலகத்தரம் வாய்ந்தது. பவர்பிளேயில் (Powerplay) அவர்கள் நான்கு விக்கெட்டுகளை இழந்த பின்னரும், 20 ஓவர்கள் வரை விளையாடியது அவர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்.”
சிறிய அணிகள் ஒரு அதிசயத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. எந்தவொரு அதிசயமும் பரவாயில்லை. அவர்களின் எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் அவர்களை ஆதரிப்பார்கள், மேலும் தாங்கள் அறிந்த கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி மீண்டும் ஒருமுறை சிந்திப்பார்கள்.
