கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது, பிரேமதாச மைதானத்திற்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதற்கு கொழும்பு பொலிஸார் முற்றாகத் தடைவிதித்துள்ளனர்.
இசைக்கருவிகள், தலைக்கவசங்கள் (helmets), ஜாக்கெட்டுகள், கண்ணாடி போத்தல்கள், பெரிய பயணப் பைகள், மதுபானங்கள், கத்திகள், கூர்மையான பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் ஆகியவற்றை மைதானத்திற்குள் கொண்டு செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதோடு, ஒவ்வொரு பார்வையாளரும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன் சிசிடிவி (CCTV) கண்காணிப்பும் பலப்படுத்தப்படும்.
உள்ளூர் நேரப்படி இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு பெருமளவிலான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 1,500 பொலிஸார் மற்றும் 600 போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மைதானத்தைச் சூழ பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மைதானத்தைச் சுற்றியுள்ள கிராண்ட்பாஸ் வீதி, செபஸ்டியன் கால்வாய் வீதி மற்றும் கெத்தாராம வீதி ஆகியவற்றின் ஊடாகச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மைதானத்திற்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக, பழைய பாதுகாப்பு அமைச்சின் வாகன தரிப்பிடம் மற்றும் போர்ட் சிட்டி (Port City) வாகன தரிப்பிடம் ஆகியவற்றிலிருந்து விசேட பேருந்து சேவைகள் (Shuttle services) இயக்கப்படும்.
தமது நடத்தையை பொறுப்புடன் அமைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட வூட்லர், ஏதேனும் இடையூறுகளை விளைவிப்பவர்களுக்கு எதிராகச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்
