“சமீபத்திய ஆண்டுகளில் நான் கண்ட மிகவும் வேதனையான அவசரநிலை இதுவாகும்-அடுத்த வேளை உணவுக்காக ஏங்கும் தாய்மார்கள், மாதக்கணக்கில் வளர்த்த பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதை ஏக்கத்துடன் பார்க்கும் விவசாயிகள், சேதமடைந்த படகுகளைக் கரையில் கட்டிவிட்டு உதவியற்று நிற்கும் மீனவர்கள்-ஐநாவின் உணவு விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி”

ஐக்கியநாடுகளின் உணவு விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர சரண் டெய்லிஎவ்டிக்கு வழங்கிய பேட்டி

கேள்வி: டிட்வா சூறாவளி நாட்டின் பெரும்பகுதியைப் பாதித்துள்ளது. தற்போதைய நிலைமை எவ்வளவு பாரதூரமானது?

நிச்சயமாகச் சொல்வதானால், சமீபத்திய ஆண்டுகளில் நான் கண்ட மிகவும் வேதனையான அவசரநிலை இதுவாகும். புள்ளிவிபரங்களின்படி 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அரை மில்லியன் குடும்பங்கள் நிலைகுலைந்துள்ளன. ஆனால், வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களில் நீங்கள் நிற்கும்போது, அந்த எண்கள் முகங்களாக மாறுகின்றன – அடுத்த வேளை உணவுக்காக ஏங்கும் தாய்மார்கள், மாதக்கணக்கில் வளர்த்த பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதை ஏக்கத்துடன் பார்க்கும் விவசாயிகள், சேதமடைந்த படகுகளைக் கரையில் கட்டிவிட்டு உதவியற்று நிற்கும் மீனவர்கள் என அந்தத் துயரம் விரிகின்றது.

இன்றும் 66,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாகியுள்ளன. மழை நின்றவுடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடவில்லை. அனர்த்த நிலைமையானது இப்போது வாழ்வாதாரப் பாதுகாப்பின்மையாக மாறி வருகின்றது. இது சில மாதங்களுக்குப் பிறகு பசி, கடன் சுமை மற்றும் பிள்ளைகள் பாடசாலையை விட்டு விலகுதல் போன்ற பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

கேள்வி: சிறுவிவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று FAO வலியுறுத்துவது ஏன்?

ஏனெனில் அவர்களுக்கு நாம் இப்போது உதவத் தவறினால், நாட்டின் உணவுத் திட்டத்தையே நாம் தோல்வியடையச் செய்கிறோம் என்று அர்த்தம். சிறுவிவசாயிகளும் மீனவர்களும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பின் முதுகெலும்பு. நமது மதிப்பீடுகளின்படி, 270,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் 100,000 ஹெக்டேர் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் 248,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயிர் செய்யத் தவறினால், சந்தையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், விலை உயரும், ஊட்டச்சத்து குறையும். இவர்களுக்கு உதவுவது என்பது வெறும் மனிதாபிமானம் மட்டுமல்ல, அது தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு புத்திசாலித்தனமான தடுப்பு நடவடிக்கையாகும்.

கேள்வி: பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விஜயம் செய்தபோது உங்களை மிகவும் பாதித்த விடயம் எது?

அவர்களின் முகங்களில் கண்ட அமைதியான உறுதியும் மீளெழுச்சியும்தான். குருநாகல், அனுராதபுரம், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களில் நான் வயல்வெளிகளுக்குச் சென்றேன். அங்கே நாற்றுகள் முழுமையாக அழிந்து போயிருந்தன. “ஐயா, எங்களுக்கு எப்போதும் உணவு தந்து கொண்டிருக்க வேண்டாம். நாம் மீண்டும் நிமிர்ந்து நிற்க மட்டும் உதவுங்கள்” என்று ஒரு விவசாயி கூறினார். அந்த வாக்கியம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. 30-40% சேதமடைந்த நிலங்களில், விதைகள் மற்றும் உரம் உடனடியாகக் கிடைத்தால் இந்த பருவத்திலேயே மீண்டும் பயிர் செய்ய முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.

கேள்வி: விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் எவ்வளவு விரிவானவை?

நிலைமை மிகவும் ஆபத்தானது. 245,000 ஹெக்டேர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி 167,000 நெற்பயிர் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6,000 ஹெக்டேர் மரக்கறித் தோட்டங்களும், 5,000 ஹெக்டேர் சோளப் பயிர்களும் அழிந்துள்ளன.

கடற்றொழில் துறையில், கடல்சார் மீன்பிடியில் 2.5 மில்லியன் டொலர்களும், உள்நாட்டு மீன்பிடியில் 9.2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. படகுகள், இயந்திரங்கள் மற்றும் வலைகள் என அனைத்தும் அழிந்துள்ளன. பல குடும்பங்களுக்கு அதுதான் அவர்களின் முழு வாழ்வாதாரமும் ஆகும்.

கேள்வி: மீட்சிப் பணியில் “நேரம்” என்பது ஏன் இவ்வளவு முக்கியமானது?

ஏனெனில் பயிர் செய்வதற்கான கால அவகாசம் (Window of opportunity) மிகக் குறுகியது; அது இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் முடிந்துவிடும். இப்போது அவர்கள் பயிர் செய்யாவிட்டால், இந்த முழுப் பருவத்தையும் இழக்க நேரிடும். அதன் விளைவுகள் 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன்: “தாமதிக்கப்பட்ட உதவி என்பது மறுக்கப்பட்ட உதவிக்கு சமம்” (Support delayed is support denied).

கேள்வி: FAO தனது மீட்சி உதவிகளை எவ்வாறு திட்டமிடுகின்றது?

நாங்கள் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ‘CROPIX’ எனும் டிஜிட்டல் பதிவேட்டைப் பயன்படுத்தி, எந்தெந்த வயல்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளோம். தற்போது சுமார் 5,000 விவசாயிகளிடம் நேரடியாகக் கருத்துக்களைக் கேட்டு வருகிறோம்.

FAO-SFERA நிதியத்தின் 400,000 டொலர் நிதி மூலம், 3,000 சிறுவிவசாயிகளுக்கு தலா 100 டொலர் பெறுமதியான விவசாய வவுச்சர்களை வழங்குகிறோம். இதன் மூலம் அவர்கள் சிறுபோக (Yala) விவசாயத்தை ஆரம்பிக்க முடியும். ஆனால், தேவைகளுடன் ஒப்பிடும்போது எமது வளங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

கேள்வி: சர்வதேச சமூகத்திற்கும் நிதியுதவி வழங்கும் பங்காளர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

தயவுசெய்து இலங்கையின் விவசாயிகளினதும் மீனவர்களினதும் மௌனமான அழுகுரலுக்குச் செவிசாயுங்கள். அவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. முறையான மற்றும் நேரடியான உதவிகள் கிடைத்தால், அவர்கள் மீண்டும் இந்தத் தேசத்திற்கு உணவளிப்பார்கள். ஆனால் நாம் இப்போது செயற்படாவிட்டால், அதன் விலையை வரும் ஆண்டுகளில் பசி மற்றும் வறுமை மூலம் கொடுக்க வேண்டியிருக்கும். மௌனத்தை மீட்சி என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்