மின்சாரக் கட்டணங்கள்: உயர்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என நுகர்வோர்  கோரிக்கை

இலங்கை மின்சார சபை (CEB) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56% கட்டண உயர்வை முன்மொழிந்துள்ள நிலையில், இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான செலவுகள் நுகர்வோருடன் நேரடியாகத் தொடர்பில்லாதவை என்றும், எனவே விலையேற்றம் நியாயமற்றது என்றும் மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, முன்மொழியப்பட்டுள்ள செலவு விபரங்களை உன்னிப்பாக கவனித்தால், அதில் பெரும் பகுதி நுகர்வோர் மீது சுமத்தப்பட வேண்டியவை அல்ல என்பது தெரியவரும் என்றார்.

“இந்த முன்மொழிவில் உள்ள பெரும்பாலான செலவுகள் நுகர்வோருக்குத் தேவையற்றவை. விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கான (Voluntary retirement scheme) கொடுப்பனவுகள் கூட இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையாகவே கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை இங்கு இல்லை. மாறாக, நுகர்வோருக்கு ஏதேனும் ஒரு வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.”

மின்சார சபைக்குள் நிலவும் முறையற்ற திட்டமிடல் மற்றும் நிர்வாகக் சீர்கேடுகளால் ஏற்படும் நிதிச் சுமைகளை நுகர்வோர் சுமக்கக் கூடாது என்றும், எனவே இந்த அதிகரிப்பிற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். “அவர்கள் எப்போதும் நுகர்வோரைச் சுரண்டவே முயற்சிக்கிறார்கள். தரமற்ற நிலக்கரி இறக்குமதி இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம். இப்போது அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளை நுகர்வோர் மீது சுமையாக ஏற்றி சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். எந்தவொரு சரியான திட்டமும் இன்றி பணத்தைச் செலவழித்துவிட்டு, இறுதியில் அதற்கான விலையை நுகர்வோர் செலுத்த வேண்டியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் 15,847 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிட்டுள்ள இலங்கை மின்சார சபை, நிதி மற்றும் செயல்பாட்டு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், மின் விநியோகத்தின் நம்பகத்தன்மைக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இந்த 13.56% உயர்வு அவசியம் எனக் கூறி, சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவை PUCSL இடம் சமர்ப்பித்துள்ளது. மதிப்பீடுகளில் ஏற்படும் மேலதிகத் தொகை அல்லது பற்றாக்குறைகள் அடுத்த கட்டண திருத்தத்தின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2026 இன் முதல் காலாண்டிற்காக 11.57% கட்டண உயர்வை மின்சார சபை கோரியிருந்தது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படாததால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதனையடுத்து, இரண்டாம் காலாண்டிற்கான முன்மொழிவை பிப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்