நுரைச்சோலை ‘லக்விஜய’ மின் உற்பத்தி நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்ட நான்கு நிலக்கரி கப்பல் சுமைத் தொகுதிகளால் (Shipments) இலங்கை மின்சார சபைக்கு 2,796 மில்லியன் ரூபாய் (2.8 பில்லியன்) நேரடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் விநியோகஸ்தரிடமிருந்து அபராதமாக 1,037 மில்லியன் ரூபாயை மட்டுமே மீளப்பெற முடியும் என உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்டம் எப்படிக் கணக்கிடப்பட்டது?
‘டெய்லி எப்.டி’ (Daily FT)பார்வையிட்ட ஆவணங்களின்படி தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்பட்ட மின் உற்பத்தி குறைபாடு மற்றும் அதற்குப் பதிலாக கெரவலப்பிட்டிய மின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட் (kWh) 37.53 ரூபாய் செலவில் மின்சாரத்தைப் பெற்றதற்கான செலவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நஷ்டம் கணக்கிடப்பட்டுள்ளது.
இயந்திரப் பாதிப்புகள் மற்றும் பராமரிப்புச் செலவுகள்:
.தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான தோராயமான பராமரிப்புச் செலவுகள்
-
காற்று முன்கூட்டியே சூடாக்கும் இயந்திரத்தை (Air pre-heater) சுத்தம் செய்ய: ரூ. 50 மில்லியன்
-
கொதிகலன் குழாய் (Boiler tube) பழுதுபார்ப்புக்கு: ரூ. 10 மில்லியன் (குறைந்தபட்சம்)
-
திறப்பாழி (Turbine) தகடுகளைப் பழுதுபார்க்க: ரூ. 100 மில்லியன் குறிப்பு: மின் உற்பத்தி நிறுத்தப்படுவதால் ஏற்படும் இழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை.
தரக்குறைவின் விளைவு:
மின்சார சபையின் தர நிர்ணயத்தின்படி நிலக்கரியின் வெப்ப மதிப்பு (Calorific Value) 5,900 kcal/kg ஆக இருக்க வேண்டும். ஆனால் விநியோகிக்கப்பட்ட நிலக்கரி அதைவிடக் குறைவாக இருந்ததால், ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக நிலக்கரியை எரிக்க வேண்டியிருந்தது. இது கொதிகலனின் செயல்திறனைக் குறைத்து, சாம்பல் கையாளும் சுமையை அதிகரித்து, ஒட்டுமொத்த உற்பத்திச் செலவை உயர்த்தியுள்ளது
DAILY FT