கொழும்பு (AFP) – ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையிலேயே டி20 உலகக் கோப்பையிலிருந்து இலங்கை அணி மிகவும் பலவீனமான முறையில் வெளியேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணியின் தலைவர், பயிற்சியாளர் மற்றும் தெரிவுக்குழுவினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 169 ஓட்டங்கள் என்ற இலக்கை நெருங்குவதற்கு கூட இலங்கை அணி எவ்வித சவாலையும் அளிக்கவில்லை. இந்த ‘சூப்பர் எய்ட்’ (Super Eights) சுற்றின் இரண்டாவது தோல்வி, இலங்கை அணியின் அரையிறுதி நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இது கொழும்பில் திரண்டிருந்த 35,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களிடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் அணியை நோக்கி கூச்சலிட்டதுடன் (booing), தோல்விக்கு பொறுப்பானவர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
குழு நிலைப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது, இலங்கை அணி குறைந்தபட்சம் அரையிறுதி வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை மீண்டும் மீண்டும் சரிந்ததால், அந்த வெற்றி இப்போது ஒரு தொலைதூர நினைவாகிவிட்டது.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, உலகக் கோப்பைக்குப் பிறகு தான் பதவியிலிருந்து விலகப் போவதாக ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.
தற்போது, இந்த அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து, அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் தெரிவுக்குழுவினரும் தானாக முன்வந்து விலகலாம் அல்லது நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
“தொடரில் எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. அந்தப் போட்டிக்கு பிறகு, உலகக் கோப்பையில் என்ன தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னாள் தலைவர் மார்வன் அத்தப்பத்து, இலங்கை அணி தன்னை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்திக்கொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்தார்
“பெரும்பாலான அணிகள் டி20 கிரிக்கெட்டின் காலமாற்றத்திற்கு ஏற்ப முன்னேறிவிட்டன, ஆனால் நாம் முன்னேற்றமின்றி தேங்கிப் போய்விட்டோம்,” என்று அத்தப்பத்து AFP-யிடம் கூறினார்.
“உங்கள் அணியின் முக்கிய வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பயணிக்க வேண்டும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை, தொடர் ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட தங்களது அணி எது என்பதில் அவர்களுக்குத் தெளிவில்லை. சர்வதேச விளையாட்டுகளில் இது போன்ற அணுகுமுறை பலன் தராது.”

தொடரின் முதல் வாரத்திலேயே இலங்கையின் மூன்று முன்னணி பந்துவீச்சாளர்கள் காயமடைந்தனர். இதற்குக் காரணம், அதிகப்படியான லாபகரமான ‘பிரான்சைஸ்’ (Franchise) லீக் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதுதான் எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
“வீரர்கள் உலகம் முழுவதும் லீக் போட்டிகளில் விளையாடும்போது, ஒரு முக்கியமான தொடருக்கு முன்னதாக அவர்கள் காயமடைய அதிக வாய்ப்புள்ளது. அதுதான் இலங்கை அணிக்கும் நடந்துள்ளது,” என்று அத்தப்பத்து மேலும் கூறினார்.