BBC
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் குறைந்தது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
முக்கிய வர்த்தகப் பாதையான இதற்கு கிழக்கே பயணித்த ஒரு கப்பலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அருகே மற்றொரு கப்பலும் தாக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் நடைபெறும் இந்த நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்ல வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
முடங்கிய கடல்வழி வர்த்தகம்:
இந்த மோதலால் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஏறக்குறைய ஸ்தம்பித்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நீரிணை “தற்போது நடைமுறையில் மூடப்பட்டுள்ளது” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காப்பீட்டுச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், சுமார் 150 க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் விலை உயர்வு:
இந்தத் தடங்கல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10% வரை உயர்ந்து, ஒரு பரல் 80டொலராக அதிகரித்துள்ளது. மோதல் நீடித்தால் இது 100 டொலரைத் தாண்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், விலை உயர்வைக் குறைக்க ‘ஒபெக்+’ (OPEC+) நாடுகள் தினசரி 206,000 பரல் கூடுதலாக உற்பத்தி செய்ய ஒப்புக்கொண்டுள்ளன, இருப்பினும் இது போதுமானதாக இருக்காது என்று அஞ்சப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான மேர்ஸ்க் (Maersk), தனது கப்பல்களை சூயஸ் கால்வாய் வழியாக அனுப்பாமல், ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக நீண்ட தூரம் சுற்றி அனுப்ப முடிவு செய்துள்ளது.
.
