இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு, “நிச்சயமான” பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.
“பொருத்தமான நேரத்திலும் இடத்திலும், குற்றவாளியான அமெரிக்காவிற்கும் இரத்த வெறி பிடித்த சீயோனிச ஆட்சிக்கும் (இஸ்ரேல்) தீர்க்கமான, தடுத்து நிறுத்தக்கூடிய மற்றும் வருத்தப்பட வைக்கக்கூடிய ஒரு பதில் வழங்கப்படும்,” என்று ஹதாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், லாரிஜானி மற்றும் ஏனைய “தியாகிகளின்” மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏற்கனவே ஏவுகணைகளை ஏவியுள்ளதாக, இராணுவத்திலிருந்து தனித்துச் செயல்படும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (Revolutionary Guards) தெரிவித்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தின
இஸ்ரேலின் முந்தைய அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானின் பாதுகாப்புத் துறைத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (Supreme National Security Council) தலைவரான இவர் மறைந்திருந்த இடத்தை, இரவு நேரத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தாக்கியதாக இஸ்ரேல் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மேலும், ஈரானின் ‘பாசிஜ்’ (Basij) துணை இராணுவப் படையின் தலைவர் குலாம்ரேசா சுலைமானி (Gholamreza Soleimani) கொல்லப்பட்டதையும் ஈரான் முன்னதாகவேஉறுதி செய்தது .

அலி லாரிஜானி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை SNSC உறுதிப்படுத்தியது
“இன்று அதிகாலை வேளையில், அலி லாரிஜானி தனது மகன் மோர்டேசா (Morteza), SNSC நிர்வாகத்தின் பாதுகாப்புப் பிரிவு துணைத் தலைவர் அலிரேசா பயாத் (Alireza Bayat) மற்றும் பல மெய்க்காப்பாளர்களுடன் சேர்ந்து தியாகமடைந்தார் (Martyred),” என்று அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் உள்ளிட்ட ஈரானிய ஊடகங்கள், லாரிஜானி ‘பர்திஸ்’ (Pardis) பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் வைத்து கொல்லப்பட்டதாக முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், “தகவல் அறிந்த வட்டாரங்கள்” இத்தகவலை மறுத்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன