கொஞ்சே ஹபீபியாசாத் பிபிசி பெர்சியன் (BBC Persian)
போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக, அந்நாட்டின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான பிரஸ் டிவி (Press TV) தெரிவித்துள்ளது. “மூத்த அரசியல்-பாதுகாப்பு அதிகாரி” ஒருவரை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அதிகாரியின் பெயர் அல்லது பதவியை பிரஸ் டிவி குறிப்பிடவில்லை. இருப்பினும், அந்த அதிகாரி கூறியதாகப் பின்வருவனவற்றைத் தெரிவித்துள்ளது: “ஈரான் எப்போது விரும்புகிறதோ மற்றும் அதன் சொந்த நிபந்தனைகள் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதுதான் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும்.”
வெறும் போர் நிறுத்தம் (Ceasefire) மட்டும் போதாது, போர் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று ஈரானிய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.
பிரஸ் டிவி தகவலின்படி, அந்த அதிகாரி ஐந்து நிபந்தனைகளைக் குறிப்பிட்டுள்ளார்:
-
எதிரி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் “ஆக்கிரமிப்புகள் மற்றும் படுகொலைகள்” முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.
-
இஸ்லாமிய குடியரசு (ஈரான்) மீது மீண்டும் போர் திணிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த முறையான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
-
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முறையாக வரையறுக்கப்பட்டு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
-
அனைத்து முனைகளிலும் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ‘தடுப்புப் போராட்டக் குழுக்களுக்கும்’ (Resistance groups) போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
-
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீதான ஈரானின் இறையாண்மை மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச அங்கீகாரம் மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
வாஷிங்டன் பல்வேறு தூதரக வழிகள் மூலம் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருவதாகவும், ஆனால் அமெரிக்காவின் முன்மொழிவுகள் “அத்துமீறியவையாக” (Excessive) இருப்பதாகத் தெஹ்ரான் கருதுவதாகவும் பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.