வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு தொழில்பேட்டைப் பகுதியை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியத் தொலைக்காட்சி மற்றும் ஈரானிய சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில், ஹைஃபா (Haifa) நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புகை மூட்டம் எழுவதைக் காணமுடிகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் இந்த மோதலில் முன்னரும் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எரிபொருள் தாங்கி (Fuel Tanker) ஒன்று, இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்களால் (Debris) தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளதாக (Reuters) செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

BBC
திங்கட்கிழமை அன்று, இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் பாசான் (Bazan) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த ஒரு தொழில்முறை கட்டடம் மற்றும் எரிபொருள் தாங்கி (Fuel Tanker) மீது விழுந்துள்ளதாக இஸ்ரேலிய தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், தீ ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எவராவது கட்டிடத்தினுள் சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ரோய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரால் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.