கோஞ்சே ஹபிபியாசாத் (Ghoncheh Habibiazad) செய்தியாளர், பிபிசி பேர்சியன்

ஈரானில் நிலவும் இணைய முடக்கத்திற்கு மத்தியில் அங்கிருப்பவர்களைத் தொடர்புகொள்வது இன்னும் மிகவும் கடினமாகவே உள்ளது. இருப்பினும், சிலர் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) போன்ற சேவைகளைப் பயன்படுத்தி இணைப்பைப் பெற அதிக விலையைக் கொடுக்கின்றனர்.
கடந்த மாதம் போர் தொடங்கியதிலிருந்து அவர்களில் சிலருடன் நான் பேசி வருகிறேன். நான் தொடர்பு கொண்டவர்களில் பெரும்பாலானோர் தொழில்நுட்ப அறிவுடைய இளைஞர்கள்.
தெஹ்ரானைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முன்னதாகக் கூறுகையில்: “நான் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கிறேன். கடந்த சில நாட்கள் தெஹ்ரானில் பயங்கரமாக இருந்தன. இது வெறும் தாக்குதல்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, அவற்றின் சத்தம் எனக்கு இன்னும் கொடூரமானதாகக் கேட்கிறது.”
ஈரானின் உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படுவது குறித்து அவர் “தொடர்ந்து கவலையடைந்து” வருவதாகவும், கடந்த சில நாட்களாக மின்வெட்டு நிலவுவதால் தனது தொலைபேசியை “முழுமையாக மின்னேற்றம்” (Fully charged) செய்து வைத்திருக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கரஜ் (Karaj) நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கூறுகையில்: “நான் நம்பிக்கையை இழக்கத் தொடங்கியுள்ளேன். ஆனால் நடப்பது நடக்கட்டும். ஏதோ ஒரு கட்டத்தில் இந்தப் போர் நடந்தே தீரும். பல ஆண்டுகளுக்கு முன்பே ஈரானை விட்டு வெளியேறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, ஆனால் நான் இங்கேயே தங்கி இந்த நாட்களை அனுபவிக்க முடிவு செய்தேன்.”
தலைநகரைச் சேர்ந்த மற்றொரு இளம்பெண் கூறுகையில்: “வாய்ப்பு கிடைக்கும்போது நான் பகல் நேரங்களில் வெளியே செல்கிறேன். வசந்த காலத்தின் இந்த நாட்களில் தெஹ்ரான் அழகாக இருக்கிறது. நான் மெல்ல மெல்ல இந்தப் போருக்குப் பழகி வருகிறேன்” எனத் தெரிவித்தார்.