, சில நாட்களுக்கு முன்பு சிசிலியில் உள்ள ‘சிகோனெல்லா’ (Sigonella) விமானத் தளத்தை அமெரிக்க இராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கு இத்தாலி அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது. இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ரோம் கொண்டுள்ள எச்சரிக்கையான அணுகுமுறையை இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தெற்கு இத்தாலிய பிராந்தியத்தில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமானத் தளத்தில் தரையிறங்கி, பின்னர் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லவிருந்த அமெரிக்க விமானங்களின் பறப்புத் திட்டம் குறித்து அறிந்த இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ (Guido Crosetto), அதற்கான அனுமதியை மறுத்ததாக இத்தாலிய தினசரி பத்திரிகையான ‘கொரியர் டெல்லா செரா’ (Corriere della Sera) செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
விமானங்கள் ஏற்கனவே பறந்து கொண்டிருந்த நிலையிலேயே இந்தத் திட்டம் தெரிவிக்கப்பட்டதாகவும், இத்தாலிய அதிகாரிகளிடம் இதற்காக முன்னதாக எந்த அனுமதியும் கோரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இத்தாலிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்போதைய உடன்படிக்கைகளின் கீழ் வரும் வழக்கமான அல்லது தளவாடச் செயல்பாடுகளை (logistical operations) அந்த விமானங்கள் மேற்கொள்ளவில்லை என்பது சோதனையில் தெரியவந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, இந்த கோரிக்கையில் குண்டுவீச்சு விமானங்கள் (bombers) உள்ளடங்கியிருந்ததாகவும், அவற்றிற்குத் தனிப்பட்ட அனுமதியும் நாடாளுமன்ற மேற்பார்வையும் அவசியம் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இத்தாலிய அரசாங்கம் பகிரங்கமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக பிபிசி பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, உடனடியாகப் பதிலளிக்க எவரும் இருக்கவில்லை.
